சீனாவைத் தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் (United Petroleum) நிறுவனம் இலங்கையில் எரிபொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுடன் கடந்த 22 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனத்திற்கு தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா முழுவதும் 500 இற்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை கொண்ட யுனைடெட் பெட்ரோலியம் லங்கா நிறுவனம், சர்வதேச ரீதியில் தமது வர்த்தகத்தை விடுவுபடுத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்படி, இலங்கையின் பெற்றோலிய சந்தையில் உற்பத்தி மற்றும் சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கு தமது நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு

பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில், சில வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை அனுமதி வழங்கியது.

இலங்கையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC நிறுவனம் ஆகியன எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வரும் நிலையில், சீனாவின் சினோபெக் லங்கா நிறுவனத்திற்கு எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சினோபெக் லங்கா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டியங்கும் RM Parks நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த நிறுவனம் இதுவரை தமது விநியோக நடவடிக்கையினை முன்னெடுக்காத நிலையில் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் (United Petroleum) நிறுவனம் விரையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC நிறுவனம் ஆகியன எரிபொருள் விலையில் ஒரேமாதிரியான திருத்தங்களை மேற்கொண்டு வந்த நிலையில், சினோபெக் நிறுவனம் சற்று குறைந்த விலையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டது.

இதன் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா IOC நிறுவனம் ஆகியவற்றின் வருமானம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை – இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு நிகரான விலை திருத்தத்தினையே சினோபெக் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin