“எல்லை தாண்டிவரும் மீனவர்களின் படகுகளைக் கொளுத்துவோம்“ என இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ள கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை – இந்திய மீன்பிடி பிரச்சினையானது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக மௌனித்த பின்னர் பாரிய சவாலாக காணப்படுகின்றது.
வங்கக்கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழக மீனவர்கள், எல்லை கடந்து மீன்பிடிக்க வருவதாக தெரிவித்து, இலங்கை கடற்படை தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறது.
கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி இரண்டு விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் சென்ற 23 இராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு
இந்திய மீனவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும், மீனவர்கள் கைது காரணமாகக் கச்சத்தீவு திருவிழாவையும் புறக்கணிக்கவும் தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள் என்ற முதல்வர் ஸ்டாலின், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை மீனவர்கள்,
எந்த காரணம் கொண்டும் இந்த மதம் சார்ந்த நிகழ்வைப் புறக்கணிப்பதைக் காரணமாகச் சொல்லி விடுதலை செய்யச் சொல்வதை ஏற்கவே முடியாது. இலங்கை கடற்படை சட்டப்பூர்வமான முறையில் தான் அவர்களை கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட காரணமாகவே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எல்லை மீறும் மீனவர்களை கைது செய்யாவிட்டால் நாங்களே கடலுக்குள் சென்று படகுகளை எரிக்க வேண்டி இருக்கும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதைத் தடுக்க வலியுறுத்தி வரும் 20ஆம் திகதி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட இருக்கிறோம்.
சம்மந்தப்பட்ட மீனவர்களை இந்திய அதிகாரிகள் நிறுத்தவில்லை என்றால் மிகப் பெரியளவில் போராட்டம் வெடிக்கும்” என்றனர்.
மீனவர் பிரச்சினை உருவானதன் பின்னணி என்ன?
1921 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒரு மீன்பிடி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி, இந்திய பகுதியில் அதிகமாக மீனவர்கள் உள்ளதால் பாக்கு நீரிணையில் அவர்களுக்கு அதிக கடல்பகுதியும், இலங்கையில் குறைவான மீனவர்கள் உள்ளதால் அவர்களுக்கு பாக்கு நீரிணையில் குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவுக்கு கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகளும் இலங்கைக்கு நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகளும் பிரிக்கப்பட்டன.
ஆனால், 1974இல் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதால் தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமானதாகவும் ஆனாலும் 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாக்கு நீரிணை (பாக் ஜலசந்தி) கடல் பகுதிகளில் இந்திய மீனவர்கள் இழுவைப்படகில் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இந்திய, இலங்கை மீனவர்களிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்சினைக்கான தீர்வே தசாப்தங்கள் கடந்தும் இழுபறியிலுள்ளது. பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் இழுவை வலையைப் பயன்படுத்த கூடாது என இலங்கை மீனவர்கள் கூறுகின்றனர். இந்திய மீனவர்கள் தரப்பில் இதற்கான மாற்று வழியைக் கேட்கின்றனர்.
அதேசமயம் செவிள் வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தடையில்லை என இலங்கை மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்மையில் கடிதம் எழுதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எண்ணிக்கை வருமாறு…
மார்ச் 28 , ஜூன் 31 , ஜூலை 24 ,ஆகஸ்ட் 10 , செம்டெம்பர் 22 , ஒக்டோபர் 50ற்கும் அதிகமான மீனவர்கள் பதிவாகிய மாதமாக கருதப்படுகின்றது.
நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசின் ஆதரவை கோரும் மீனவர்கள்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தமிழ் நாட்டின் கடற்றொழிலாளர்களின் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன்போது, இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகளின் எண்ணிக்கை குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்கள் வெகுவாக பாதிப்படைந்துவரும் நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.