சிங்கள அரசியல் கட்சிகளையும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் சந்தித்து வருவரும் இந்தியா, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனக்குரிய நலன்களை இலங்கையிடம் இருந்து பெற்று வரும் நிலையில் அல்லது அதற்கான பேரம் பேசல்களை நடத்திக் கொண்டு இலங்கைத்தீவை இந்தியாவின் மற்றொரு மாநிலமாகக் கருதுகின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஏற்கனவே இக்கேள்விகள் பலரிடமும் உண்டு. ஆனாலும், மிகச் சமீபகாலமாக அக் கேள்விகளை நிரூபிக்கும் வகையில் இலங்கைத்தீவு மீதுதான இந்தியாவின் சுய நல அக்கறையைக் காண முடிகின்றது.
ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்காவைப் புதுடில்லி அழைத்துச் சந்தித்தது முதல் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை கொழும்பில் உள்ள புதிய தூதுவர் யாழ்ப்பாணத்தில் சென்ற வெள்ளிக்கிழமை சந்தித்தது வரையும் இந்தியாவின் அக்கறையைக் காணலாம்.
இந்த அக்றை என்பது ஈழத்தமிழ் மக்கள் சார்ந்தோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளின் நலன்சார்ந்தோ இல்லை.
ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் நலன் என்பதன் ஊடாக இந்தியா என்ற ஒரு பெரிய சக்தி, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தனக்குரிய பாதுகாப்புத் தளத்தைக் கட்டமைக்கிறது என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை.
ரணில், மகிந்த, சஜித், மைத்திரிபால சிறிசேன ஆகிய மூத்த சிங்கள அரசியல் தலைவர்கள் தலைமையிலான பிரதான அரசியல் கட்சிகள் படிப்படியாகச் சிதறுண்டு வரும் நிலையில். ஜே.வி.பி புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பில் சந்தித்தது ஏன்?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டுத் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதைவடைந்து வரும் நிலையில் குறிப்பாகத் தமிழரசுக் கட்சி உடைந்துபோகவுள்ள சூழலில் தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா சந்தித்துப் பேசியிருக்கிறார்.
பதின் மூன்றுதான் தீர்வு என்று இந்தியா ஈழத் தமிழர்களின் நெற்றியில் எழுதியுள்ளது.
ஆனால் அதனை ஏற்க முடியாது என்று தமிழ்தரப்பு நிராகரித்து விட்ட பின்னணியிலும் அதனை நடைமுறைப்படுத்தவே கூடாது என்ற பிடிவாதத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் துணிந்து குரல் எழுப்பும் நிலையிலும், தமிழ்த்தேசியக் கட்சிகளுடனான சந்திப்பு எதற்காக?
புதிய தூதுவர் மரியாதையின் நிமித்தம் சந்திக்கிறார் என்று சில தமிழ் உறுப்பினர்கள் கற்பிதம் செய்யலாம்.
ஆனால் கடந்த ஜனவரி மாதம் புதிய தூதுவர் தமிழ்த்தேசியக் கட்சிகளைக் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சம்பிரதாயபூர்வமாகப் சந்தித்தபோது, ”தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த மட்டுமே முடியும்” என்று கூறியிருக்கிறார்.
தூதுவர் அவ்வாறு கூறியபோது தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டனத்தை உடனடியாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக அமைதியாக வாயை மூடிக் கொண்டிருந்திருக்கின்றனர்.
1983 இல் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தில் தலையிட்ட இந்தியா, 2009 இற்குப் பின்னரான சூழலில் தமக்குரிய புவிசார் அரசியல் நலன்களையும் வடக்குக் கிழக்குத் தமிழர் தயாகத்தில் பெற்றுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களை நேர்மையாக வழங்கவில்லை.
மாறாகப் பதின்மூன்றை ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மாத்திரமே இந்தியா தமிழர்களை வலியுறுத்தி வருகிறது.
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் தமிழ்த்தேசியக் கட்சிகளை சந்தித்தபோது உங்களிடம் ஒற்றுமை இல்லை என்ற கிண்டல் தொனியில் கூறிய கதைகளும் உண்டு.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரமே பல சந்தர்ப்பங்களில் இந்தியத் தூதுவர்களுக்கும் யாழ் துணைத் தூதரக தூதுவர்களுக்கும் தக்க பதில் வழங்கியிருக்கிறார்.
ஏனைய தமிழ் உறுப்பினர்கள் எவரும் இந்தியாவின் மனட்சாட்சியைக் கிளறிவிடும் அளவுக்குக் கருத்துக் கூற விரும்புவதில்லை.
இப்பின்புலத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பை புதிய தூதுவருடனான சம்பிரதாயபூர்வ சந்திப்பு என்று கூறிவிட முடியாது.
ஏனெனில் புதிய தூதுவர் அங்கு முன்வைத்த கருத்துக்கள் அத்தனையும் இந்திய – இலங்கை உறவு குறிப்பாக இந்தியா மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியதாகவே இருந்தது.
அப்படித்தான் சம்பிரதாயபூர்வ சந்திப்பு என்று சொன்னாலும் இலங்கைத்தீவின் பிரதான பிரச்சினை எது? ஈழத்தமிழர் விவகாரம்.
ஆனால் அந்த விவகாரத்தை இந்தியா 2009 இற்குப் பின்னரான சூழலில் பத்தோடு பதினென்றாகவே கருதுகின்றது என்பதையே இந்தியத் தூதுவர்களின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
2024 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு இலங்கைகத்தீவில் என்ன தேவையென்றால், தங்களுக்கு ஏற்ற ஒரு ஒரு ஜனாதிபதியும் பெரும்பான்மைப் பலம் உள்ள அரசாங்கமும் மாத்திரமே.
தமிழர் விவகாரம் பற்றியதல்ல
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இருந்து இலங்கை அரசு என்ற கட்டமைப்பைத் திருத்தம் செய்வதுதான் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு வேலையாக இருந்ததே தவிர, ஈழத்தமிழர் விவகாரம் பற்றியதல்ல.
2012 இல் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்க முன்வைத்த தீர்மானமும், 2013 இல் செய்யப்பட்ட சிங்கப்பூர் பிரகடணமும், 2023 இல் கையளிக்கப்பட்ட இமாலயப் பிரகணடமும் இலங்கையின் ஒற்றையாட்சியை வலியுறுத்தியதாகவே இருந்தன.
பௌத்த சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தினால் தமக்குரிய அரசியல் – பொருளாதார நலன்களை சிங்கள அரசியல் தலைவர்களிடம் இருந்து பெறலாம் என்ற அணுகுமுறை அமெரிக்க – இந்திய அரசுகளினால் கடந்த சில ஆண்டுகளாக கையாளப்பட்டு வருகின்றன.
அதனாலேயே ஈழத்தமிழர் விவகாரத்தை ஒப்பாசாரத்துக்காக இந்த நாடுகள் கையில் எடுக்கின்றன.
ஏனெனில் ஈழத்தமிழர் விவகாரத்தை வலியுறுத்தினால் பௌத்த சிங்கள மக்கள் கோபமடைவார்கள் என்ற ஒரு அச்சம் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கு இல்லாமலில்லை.
சிங்கள மக்களைக் கோபப்படுத்தக்கூடாது என்று 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கதின்போது சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூறியமைகூட அமெரிக்க – இந்திய அரசுகளின் கருத்து வெளிப்பாடுதான்.
பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள பல அதிகாரங்கள் அவ்வப்போது கொழும்பு நிர்வாகத்தினால் தன்னிச்சையாக அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீளப் பெறப்பட்டது போன்று, மாகாணங்களுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களை மீளப் பெறக்கூடிய முறையில் கடந்த வாரம் அரச வர்ததமானி இதழல் வெளியாகியுள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களை மீளப் பெற வேண்டும் என வலியுறுத்தி உதய கம்மன்பில கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணைதான் கடந்த வாரம் அரச வர்த்தமானி இதழாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்பின்புலத்தில் இந்தியத் தூதுவர் தமிழ்த்தேசியக் கட்சிகளைச் சந்திப்பது அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிப் பேசுவதெல்லாமே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை ஈழத்தமிழர் ஏற்க வேண்டும் என்பதன் வெளிப்பாடுகள்தான்.
ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ. புளொட் மற்றும் விக்னேஸ்வரன் தலைமையிலான அணி இதனைப் பகிரங்கமாகப் பேச முன்வருவதில்லை.
சீனாவை அனுமதிக்க முடியாது
வெள்ளிக்கிழமைச் சந்திப்பில்கூட இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்புப்புப் பற்றியும் வடக்குக் கிழக்கில் சீனாவின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுமதிக்காது என்றும் பேசியிருக்கின்றனர்.
கொழும்போடும் சிங்கள அரசியல் தலைவர்களோடும் மாத்திரம் பேரம் பேசும் இந்தியா, அதுவும் பௌத்த சிங்கள மக்களின் நலனுக்காகச சில விடயங்களில் விட்டுக் கொடுத்துச் செயற்படும் இந்தியா, ஈழத்தமிழர்களை மாத்திரம் ஏன் ஓரக் கண்ணால் பார்க்கின்றன என்பதைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் புரிய மறுக்கின்றன.
இந்தியத் தூதுவர் சந்திக்க அழைத்ததும் ஏன் இவர்கள் ஓடிச் செல்கிறார்கள் என்று ஒரு சாதாரண பொதுமகன் வெட்கப்பட்டுக் கேட்கும் அளவுக்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஏன் சிந்திப்பதில்லை?
ஜே.வி.பி தலைவர் எதிர்வரும் நாட்களில் கனடாவுக்குப் பயணம் செய்யவுள்ளார். அமெரிக்கா – இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ள நிலையில் கனடா பயணத்துக்கு அடுத்தாக சீனாவுக்குச் செல்லவுள்ளார்.
2015 இல் மைத்திரி ரணில் அரசாங்கத்தின்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க, இந்திய அரசுகள் மாத்திரமல்ல சீனா, ரஷ்யா போன்ற நாடுகளோடும் இலங்கை சமாந்தரமான உறவுகளைப் பேணும் என்று விளக்கமளித்திருந்தார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குக் கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்த ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத், 2015 இல் ரணில் கூறிய அதே கருத்தையே முன்வைத்திருந்தார்.
அதாவது அமெரிக்க – இந்திய அரசுகள் மாத்திரமல்ல சீனாவும் இலங்கைக்குத் தேவை என்று விபரித்திருந்தார்.
ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாத்திரம் இந்தியா போதுமானது என்ற மன நிலை நீட்சியடைகிறது.
பல சந்தர்ப்பங்களில் இலங்கை இராஜதந்திரம் இந்திய இராஜதந்திரத்தின் முகத்தில் கரிபூசிய பின்னரும்கூட இலங்கையிடம் இந்தியா பணிந்துபோயிருக்கிறது.
அதேநேரம் ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கைத்தீவு மக்களின் ஒட்டுமொத்த ஜனநாயகப் பாதுகாப்புப் பிரச்சினையாகவும், மனித உரிமை மீறல் விவகாரங்களாகவும் மாத்திரம் மடைமாற்றியுள்ள சூழலில், இந்தியா மீது தமிழ்த்தரப்பு நம்பிக்கை வைத்திருப்பது நகைப்புக்கிடமானது.
சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அமெரிக்கா மீது நம்பிக்கை வைத்திருப்பதும் வேடிக்கையானது.
தற்போது குழப்பியுள்ள புவிசார் அரசியல் – பொருளாதார சூழலில் சீனா உட்பட உலகின் எந்த ஒரு நாட்டோடும் தமிழ்த்தரப்பு பேச வேண்டும்.
ஆனால் அதற்குரிய தற்துணிவும் சுயமரியாதையும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
மாறாக கட்சிப் பதவிப் போட்டிகளும் எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வதும் மற்றும் தேர்தல் வியூகங்களும் மாத்திரமே தற்போது விஞ்சியுள்ளன.