தலைவர் பதவியை குறிவைத்து சுமந்திரன் காய் நகர்த்தல்?

தமிழ்த் தேசிய பரப்பில் அரசியலில் ஈடுபட்டுவருகின்ற அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியாக தமக்குள் முரண்பட்டுக் கொள்வதாக கூறிக்கொண்டாலும் தலைமைத்துவம், பதவி மோகம் காரணமாக பிளபுபட்டுக் கொண்டே தான் இருக்கின்றன.

விடுதலைப்புலிகளினால் 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

விடுதலைப் போராட்டம் 2009 இல் ஆயுத ரீதியாக மௌனித்த நிலையில் 2010 இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கூட்டமைப்பிலிருந்து விலகியிருந்தனர்.

கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யுமாறு கோரிய போதிலும் தமிழரசுக் கட்சியினர் அதற்கு இணங்கிச் செல்லவில்லை.

ஈற்றில் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக் கட்சியினை தவிர்த்த ஏனைய கட்சிகள் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக தம்மை பதிவு செய்துள்ளனர்.

தமிழரசுக்கட்சிக்குள் இரு அணி
இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரன் அணி, சிறி அணி என இரு அணிகள் பிரிந்து கொண்டு பதவிக்காக போராடிக் கொண்டிருக்கின்றன.

கட்சித் தலைவர் தெரிவின் போது இந்த நிலை உச்சம் கண்டிருந்தது.

ஒரே கொள்கையுடைய கட்சியினர் இருதரப்பாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இது ஏனைய கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சியை எளிநகையாடுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதனுடைய உச்ச கட்டமாக தலைவர் பதவி தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது கைகலப்பில் ஈடுபட்டு மோதிக் கொண்டமை தமிழரசுக் கட்சிக்குள் உருவான பிளவை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தவிடாது நீதிமன்ற உத்தரவினை சுமந்திரன் தமது ஆதரவாளர்கள் மூலம் காய்களை நகர்த்தி தடுத்திருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

கட்சிக்குள் இரு அணிகள் பதவிக்காக மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்கள் ஆதங்கம்

தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழின ஒடுக்குமுறை தொடர்பில் கொள்கைகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில், தமிழ்த் தேசிய அரசியல் உள்ள அரசியல்வாதிகள் தமக்குள் போட்டி போட்டுக்கொள்வது இன்னும் தென்னிலங்கையின் காய்நகர்த்தல்களுக்கு இலகுவை ஏற்படுத்திக் கொடுக்கும் என மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளின் பிளவு வருத்தமளிக்கின்றது. இந்தக் கட்சிகள் மேலும் பிளவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளமையும் நோக்குதலுக்கு உரியது.

ஆகவே தமிழ்த் தேசிய அரசியல் ஈடுபட்டுள்ளவர்கள் மக்கள் நலனின் அக்கறை கொண்டு, தென்னிலங்கையின் தமிழின அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட ஓரணியாக திரள வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Recommended For You

About the Author: admin