கொழும்பு – மீகொட பகுதியில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அருகில் உள்ள மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியொருவர் கடந்த 2023ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் தொடக்கம் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் பொலிஸில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அப்பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் கடந்த15ஆம் திகதி இரவு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 10,000 முறைப்பாடுகள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 10,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2,242 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகளும், சிறுமிகள் பலாத்காரம் தொடர்பான 51 முறைப்பாடுகளும், சிறுவர்களை ஆபாசமான பதிவுகளில் பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு சிறுவர்களை பயன்படுத்துதல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறை, புறக்கணிப்பு, கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை தொடர்பிலும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் இலங்கை எதிர்கால தூண்கள். அவர்களின் பாதுகாப்பு என்பது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.