உள்ளூர் உற்பத்தியினை பெருக்குவதன் மூலமாகவே எங்கள் தேசத்தை மாற்றிக்கொள்ள முடியும் என வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் செ.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விவசாய சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எங்களது நாடு மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனை மீட்பதற்காக ஜனாதிபதியினால் ஐம்பது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளிற்கு முக்கியமானதாக காணிகளிற்கு அனுமதிபத்திரம் வழங்கல், வனவள திணைக்களத்தில் இருந்து காணிகளை விடுவித்தலாகும்.
உள்ளூர் உற்பத்தி
குறிப்பாக இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் பிரசன்னத்துடன் சம்மந்தப்பட்ட கிராமங்களிற்கு சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
உள்ளூர் உற்பத்தியினை பெருக்குவதன் மூலமாகவே எங்கள் தேசத்தை மாற்றிக்கொள்ள முடியும். வனவள திணைக்களத்தினரால் உழுது, கிணறு வெட்டி, தோட்டம் செய்த காணிகளிற்கு கூட கல்லினை போடுகின்ற மோசமான செயலினை செய்கின்றனர்.
வன இலாகாவினர் ஒரு ஐந்து ஏக்கரையாவது வவுனியா மாவட்டத்தில் சிறப்பாக பராமரித்தோம் என்பதை காட்டமுடியுமா? மேலைத்தேய நாடுகளிலே பற்றைக்காடுகளை காண முடியாது. வன இலாகா பயன்படுத்துவார்கள் அல்லது விவசாயிகள் பயன்படுத்துவார்கள். ஆனால் இங்கே விவசாயம் செய்ய இடமில்லை.
நாட்டில் சாபக்கேடான வன இலாகா
கடந்த முப்பது வருடங்களிற்கு முன் உழுந்து உற்பத்தியில் இலங்கையிலே வவுனியா மாவட்டமானது 40 வீதமான உற்பத்தியினை மேற்கொண்ட மாவட்டமாகும். இன்று காணிகள் முழுவதும் வன இலாகாவிடம் உள்ளது. இவ்வாறு இருப்பின் எவ்வாறு உற்பத்தியை பெருக்கவோ, உற்பத்தியை செய்யவோ முடியும்.
ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்பது தங்களின் ஐம்பது திட்டங்களிலே எமக்குரிய காணிகளிற்கான அனுமதி பத்திரத்தினை தருவதன் மூலமாக நாங்கள் வன இலாகாவினரிடம் இருந்து தப்பிக்கொள்ள முடியும்.
இந்த நாட்டில் வன இலாகாவினர் ஒரு சாபக்கேடான ஒரு இலாகாவாகும். ஜனாதிபதியிடம் கேட்பது நீங்களாக கூறிய 50 விடயத்தில் அனுமதி பத்திரங்களை தாருங்கள் அதன் மூலம் வன இலாகாவிடமிருந்து தப்பி கொள்ள முடியும். வன இலாகாவின் நடவடிக்கையை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தாலே இடங்களை மீட்க முடியும்.
உளுந்து உற்பத்தியாக இருந்தாலும், மரக்கறி செய்கையாக இருந்தாலும் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தி செய்து நாட்டிற்கே கொடுக்க கூடியளவு சந்தர்ப்பம் இருக்கின்றது.
மக்களுடைய காணிகளுக்கு ஜப்பான் உறுதி
மேட்டுநிலம், வயல், கால்நடை மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியாக செய்து கொண்டிருக்கின்றோம். வன இலாகா விட்டால் இவர்கள் நடும் மரத்திற்கு பதிலாக தென்னை மரங்களை நட்டு வன இலாகைவை விட பெரிய வேலைகளை செய்து காட்டுவோம்.
வன்னி பிரதேசத்தை பொறுத்தவரையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மூன்று மாவட்டங்களிலும் குறைந்தது 40 வருடங்களாக பயன்பாட்டிலுள்ள உளுந்து, மேட்டிநில பயிற்செய்கை, தென்னை மரங்கள் உள்ள மக்களுடைய காணிகளுக்கு ஜப்பான் உறுதி உள்ளது. இப்போது பிரதேச செயலாளர் அது பயன்பாட்டில் இல்லை என்று கூறுகிறார்.
இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களையும் ஒரே போல் திட்டம் போடாதீர்கள். கிராமங்களை பொறுத்தமட்டில் 10 , 15 க்கு மேற்பட்ட ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்கின்றார்கள். அதனை குறைக்க நினைக்காதீர்கள். குறைந்தது 5 ஏக்கராவது வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.