பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதில் அரசியல் தலையீடு

மாணவர்களை பிரதான பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்ப்பதற்கு அண்மைய காலங்களாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் தலையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

குறித்த செய்திகளின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் மூலம் கல்வி செயலாளரிடம் 2367 தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின் படி, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாணவர்களை பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு சேர்ப்பதில் அதிகளவில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர் .

அதன்படி, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் தலையீடுகள் உத்தரவுக் கடிதங்களாக கருத்தக்கூடியவை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதான பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு 861 அமைச்சர்களும் 654 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவை தவிர………

துறைத் தலைவர்களிடமிருந்து 190 தலையீடுகள்,

பிரதமர் அலுவலகத்திலிருந்து 160 தலையீடுகள்,

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடமிருந்து 53 தலையீடுகள்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களிடமிருந்து 43 தலையீடுகள்,

கல்வி அமைச்சின் ஊழியர்களின் 45 தலையீடுகள்,

கல்வி அமைச்சின் அதிகாரிகளின் 40 தலையீடுகள்,

அரசியல் கட்சிகளுடன் நேரடியாக தொடர்புடைய தொழிற்சங்கங்களின் 36 தலையீடுகள்,

பல்வேறு தொழில்முறை சங்கங்களின் 25 தலையீடுகள்,

நாடாளுமன்றத்தில் இருந்து 24 தலையீடுகள் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 20 தலையீடுகள்,

கல்வி அமைச்சரின் தனிப்பட்ட ஊழியர்களின் 10 தலையீடுகள்,

மாகாண சபை உறுப்பினர்களின் 15 தலையீடுகள் ஆகிய கோரிக்கைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தாரிகளுடனான அரசியல் தொடர்பு

இவ்வாறு அமைச்சர்கள் உட்பட பல்வேறுபட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் அனுப்பப்பட்ட கடிதங்களில், விண்ணப்பித்தவர்களுடனான அரசியல் தொடர்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதிகளவான விண்ணப்பதாரர்களின் பெயர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடசாலைகள் குறிப்பிட்டு பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கோரிக்கைகள் நேரடியாக கல்வி அமைச்சின் செயலாளரின் கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தணிக்கை குறிப்பிடுகின்றது.

பரிந்துரைகளுக்கமைவான கடிதங்கள்…….

மேலும், அமைச்சர்கள் உட்பட பல்வேறுபட்ட மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு மே மாதம் வரை 3559 கடிதங்களை கல்வி செயலாளர் வழங்கியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் அறிக்கையிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin