இலங்கைத் தீவில் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் பெற வேண்டி வாக்குகளின் எண்ணிக்கை குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தேர்தல் கட்டாயம் நடைபெறும் என ஐ.தே.கவின் தேசிய மாநாட்டில் அறிவித்திருந்தார்.
என்றாலும், அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் பின்புலத்தில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு, ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு கட்டாயம் நடைபெறும் என இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய பிரதானக் கட்சிகள் பரந்தப்பட்ட கூட்டணிகளை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தலைமையில் அமையவுள்ள கூட்டணி தொடர்பிலான அறிவிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில், வாக்களிக்க மொத்தம் 169 இலட்சம் வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 142 இலட்சம் பேர் வாக்களிக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனின் வெற்றிபெறும் வேட்பாளர் 71 இலட்சம் வாக்குகளை பெற வேண்டும். கடந்த தேர்தலை விட இம்முறை வெற்றி வேட்பாளர் பெற வேண்டிய வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
50 சதவீதத்தை கடக்க வேண்டுமெனில் கட்டாயம் 71 இலட்சம் வாக்குகளை வெற்றி வேட்பாளர் கடக்க வேண்டுமென கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக களமிறங்க உள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த இலக்கை அடைந்தால் மாத்திரமே தமது ஜனாதிபதி கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
ஆனால், இம்முறை 50 சதவீத வாக்குகளை வேட்பாளர் ஒருவர் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.