அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தை, அண்மையில் தாக்கிய புயல் மழையைத் தொடர்ந்து, அங்குள்ள உலகில் மிகவும் வெப்பமான ‘Death Valley’ பாலைவனத்தில் ஆச்சரியப்படும் வகையில் ஏரி உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வீசிய சூறாவளி மற்றும் கனமழையில் காரணமாக ‘Death Valley’ தேசியப் பூங்கா அமைந்திருக்கும் பாலைவனப் பகுதியில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டது.
இந்த வெள்ளம் காரணமாக உருவான 11.3 கீலோ மீட்டர் நீளமும், 6.4 கிலோமீட்டர் அகலமும், 0.6 மீட்டர் ஆழமும் கொண்ட அந்த ஏரி இரண்டு மாதங்களுக்கு பின்னர் மறைந்துவிடும் என அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.
எனினும், தற்போது ஆறு மாதங்களுக்கு மேல் கடந்துள்ள போதிலும் அந்த ஏரி வற்றாமலும் வறண்டு போகாமலும் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘Death Valley’ பாலைவனப் பகுதியில், ஆண்டுக்கு சராசரியாக 50 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும். எனினும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அந்த பகுதியில் 127 மில்லி மீட்டர் வரை மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட்டில், அந்த பாலைவனப் பகுதியில் பெய்த வரலாறு காணாத புயல் மழையை தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், அங்குள்ள கட்டடங்களும், அடிப்படை வசதிகளும் சேதமடைந்தன.