இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட முடியாது – அநுர

இலங்கைத் தீவின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் திட்டவட்டமாக செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த அவர், தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சிலரை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை சாதகமான மற்றும் முக்கியமான விடயமாக கருதி பயணம் மேற்கொண்டதாக அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த அழைப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் வெளியிட்ட கருத்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அநுரகுமார,

”இலங்கை மக்களின் மனநிலையே இந்த அழைப்புக்கு வழிவகுத்துள்ளது.

ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையில் அரசாங்கத்தை அமைக்கத் தயாராக இருக்கும் அரசியல் இயக்கங்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றன.

அரசாங்கம் அமைவதற்கு முன்னரும் பின்னரும் இவ்வாறான உறவுகளை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.” என்றார்.

இந்த நிலையில், ஜே.வி.பியின் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியாவுடனான அரசியலை எதிர்ப்புகளுடனனும் முரண்பாடுகளுடனும் செய்ய வேண்டிய நிலைமை இருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க, ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், உலகம் மாறும் போது தமது கட்சியும் மாறுகிறது எனவும் அநுர இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் அரசியல் விடயங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை எனக் கூறியுள்ள அநுர, இந்த அழைப்பின் மூலம் இலங்கையின் அடுத்த தலைவருக்கு வெற்றிடம் இருப்பதை நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளகளையும் அநுர தலைமையிலான குழு சந்தித்திருந்தது.

இதுகுறித்து கூறிய அநுரகுமார,

”புவிசார் அரசியலில் இலங்கை ஒரு போட்டியாளர் அல்ல. ஆனால், புவிசார் அரசியலில் இந்தியா ஒரு போட்டியாளர்.

எனவே, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

இதன் காரணமாக அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாதிருக்கும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நாம் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்த மாட்டோம். ஒரே விடயத்தைதான் முன்வைப்போம்.

எமது கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் குழப்பங்கள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தாம் நம்புவதாகவும் அனைத்து புலம்பெயர் இலங்கையர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜே.வி.பி தயாராக இருப்பதாகவும் அவர் இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசத்தை கட்டியெழுப்புதல், தேசிய ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அநுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin