ஆளுங்கட்சியின் புதிய சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தச் சட்ட மூலத்தின் உள்ளடக்க அத்தியாயங்கள், அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அதனால், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஊடாகவும் ஒப்புதல் பெறப்பட‌ வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கலாநிதி அவந்தி பெரேரா அறிவித்தார்.

தற்போது கலைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் அதன் மக்கள் பிரதிநிதிகளை மீள அழைக்கும் அதிகாரம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்படும் வண்ணம், நகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தச் சட்ட மூலம் தனி நபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் இந்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தியும், அது அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் கூறி 27 மனுக்கள் உயர் நீதிமன்றில் பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்த 27 மனுக்கள் மீதான விசாரணைகளும், நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது மனுக்களின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த சட்ட மா அதிபர் சார்பில், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கலாநிதி அவந்தி பெரேரா சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார்.

பொது மக்களின் சர்வஜன வாக்குரிமையானது அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட்டுள்ள மக்கள் இறைமையின் ஒரு பகுதி என கலாநிதி அவந்த்தி பெரேரா குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கு உட்பட்டு, பொது மக்களுக்கு தமது பிரதிநிதிகளை சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்ந்தெடுக்க அரசு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கலாநிதி அவந்தி பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

கலக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ரைங்களை மீள அழைக்க, உத்தேச சட்டமூலம் ஊடாக அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் கலாநிதி அவந்த்தி பெரேரா, அந்த நிலைமை அரசியலமைப்பின் 4( ஆ), 10, 12(1), 14(1) ஆம் உறுப்புரைகளை மீறுவதாக சுட்டிக்காட்டினார்.

அதனால் இந்த்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட வேண்டுமாக இருந்த்தால், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பூடாகவும் அனுமதி பெறப்ப‌டல் வேண்டும் என கலாநிதி அவந்தி பெரேரா குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த சிற‌ப்பு மனுக்கள் மீதான விசாரணைகளை நிறைவுக்கு கொண்டுவந்த உயர் நீதிமன்ற‌ம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனி நபர் பிரேரனையாக கொண்டுவரப்பட்டுள்ள சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை, இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தது.

Recommended For You

About the Author: admin