அரசாங்கத்தின் எதிர்கால இலக்கு என்ன?

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையுடன் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு கடந்த 26ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

அரசியலமைப்பின் 70 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய அமர்வு தொடங்கும் போது, நாடாளுமன்ற அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்கும் அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்தை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் கிடைக்கிறது.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம், எதிர்வரும் 8ஆம், 9ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்படும் போது, அதுவரை சபையில் பரிசீலிக்கப்படாத கேள்விகள் மற்றும் பிரேரணைகள் தானாக ரத்தாகும்.

மேலும், நாடாளுமன்றத்தின் இணைப்புக் குழு, உயர் பதவிகளுக்கான குழு, தெரிவுக்குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தவிர மற்ற அனைத்துக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் புதிய அமர்வின் தொடக்கத்தின் பின்னர் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 20 ஓகஸ்ட் 2020 முதல் 12 டிசம்பர் 2021 வரையிலும், இரண்டாவது அமர்வு 18 ஜனவரி 2022 முதல் 28 ஜூலை 2022 வரையிலும் நடைபெற்றது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு 03 ஓகஸ்ட் 2022 முதல் 27 ஜனவரி 2023 வரை நடைபெற்றது. ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவில் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் 106 நாட்கள் சபை அமர்வு இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, கோப் குழுவின் தலைவரை அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்ய முடியாது போனமையால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்களை முன்வைத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin