இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamilarasu party) தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வடக்கின் சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக அறிய முடிகிறது.
இந்திய தலைநகர் புதுடெல்லியில் விரைவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் (National people power) தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய அரசாங்கம் நேரடியாக அழைத்து புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நேற்று திங்கட்கிழமை புதுடில்லி சென்ற அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழு, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் (Ajit Doval) உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் தேசிய மக்கள் சக்தி கலந்துரையாடல் நடத்தியுள்ளது.
இந்த சந்திப்புகளில், இருநாட்டு அரசியல், சமூக,பொருளாதார உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தெற்கில் தேசிய மக்கள் சக்திக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக வெளியாகிய சில புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் இந்திய அரசாங்கம் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்திப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வடக்கில் தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தமிழரசுக் கட்சிக்கான செல்வாக்கு ஓரளவு அதிகரித்துள்ளதாக கருதப்படும் பின்புலத்திலேயே இந்திய பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த காலத்தில் பலமுறை புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது வெற்றியளித்திருக்கவில்லை.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சி இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரனிடம் ‘ஒருவன்’ செய்தி பிரிவு வினவிய போது, ”இன்னமும் அவ்வாறான முயற்சிகள் இதுவும் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் இதுதொடர்பில் அறிவிப்போம்.” எனக் கூறினார்.
என்றாலும், இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதுடன், இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாட தமிழரசுக் கட்சி உத்தேசித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.