சர்ச்சை திருமணம் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு மற்றொரு வழக்கில் தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் நெறிமுறைகளுக்கு எதிரான திருமண வழக்கிலேயே அவர்களுக்கு 07 ஆண்டுகள் சிறைத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடியாலா சிறை வளாகத்தில் 14 மணிநேரம் நடத்தப்பட்ட வழக்கின் விசாரணை ஒரு நாள் கழித்து, சிவில் நீதிபதி குத்ரதுல்லா இன்று சனிக்கிழமை இந்த தீர்ப்பினை அறிவித்தார்.

மேலும், தம்பதிகளுக்கு தலா 500,000 பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது இம்ரான் கானும் மற்றும் புஷ்ரா பீபியும் நீதிமன்ற அறையில் இருந்தனர்.

முன்னதாக பாகிஸ்தானின் அரசின் இரகசிய ஆவணங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் அரச பரிசில்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக, அவருக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இத் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்ட அதே வாரத்தில் நீதிமன்றின் 07 ஆண்டுகள் சிறைத் தண்டன‍ை உத்தரவை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin