எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொலை செய்யப்பட்ட பின்னர், கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதை தன்னால் அறிந்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எமது மக்கள் சக்தி கட்சியினை சமன் பெரேராவின் குடும்ப உறுப்பினர்களே கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்த கட்சியை சேர்ந்த எவருடனும் நான் தொடர்புகளை வைத்திருக்கவில்லை.
எனினும் சமன் பெரேராவின் மறைக்கு பின்னர், வெற்றிடமாகியுள்ள கட்சியின் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க போகின்றனர் என்பதை அறிந்துக்கொள்ள அவரது குடும்ப உறுப்பினர்களை தொடர்புக்கொள்ள முயற்சித்த போது அது முடியாமல் போனது.
கட்சியின் புதிய தலைவர் யார் என்று எனக்கு தெரியாது எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எமது மக்கள் சக்தி கட்சி கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன் 57 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்றிருந்தது. இந்த வாக்கு எண்ணிக்கை காரணமாக அந்த கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக யாரை நியமிப்பது என்ற இழுப்பறி நிலை ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்ததுடன் இறுதியாக அத்துரலியே ரதன தேரர் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
பொலியத்தையில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.