மத்திய கிழக்கின் செங்கடல் பகுதியில் யேமன் ஹவுதி போராளிகள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்பான நெருக்கடி நிலைமை முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படவில்லை என சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து அதற்கு பதில் தாக்குதல் நடத்தும் நோக்கில் ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹவுதி போராளிகள் செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், செங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிநிலை தற்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை என வர்த்தக கப்பல் நிறுவனமான ஜேர்மனியின் ஹாபக்-லோய்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோல்ஃப் ஹேபன் ஜென்சன் ஹேம்பர்க் நகரில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எனினும் செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக சரக்குக் கப்பல்களை பாதுகாக்க அரசியல் ரீதியிலான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இந்த நெருக்கடி நிலைமை ஆறு மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரும் சாத்தியம் இருப்பதாக ஹேபன் குறிப்பிட்டுள்ளார்.
ஹாபக்-லோய்ட் உலகில் ஐந்தாவது மிகப் பெரிய சரக்குக் கப்பல் நிறுவனமாகும்.
செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக ஏனைய நிறுவனங்களுக்கு சொந்தமான வர்த்தக கப்பல்களை போல் இந்த நிறுவனத்தின் வர்த்தக கப்பல்களும் வேறு பயணப் பாதையை பயன்படுத்தி வருகின்றன.
வர்த்தக கப்பல்கள் சுயஸ் கால்வாய் வழியாக செல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரித்துள்ளதுடன் செலவுகளும் அதிகரித்துள்ளன.