வடக்கிழக்கு ஜோர்தானில் சிரிய எல்லையில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது பயங்கரவாதத் தாக்குதல் என ஜோர்தான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஜோர்தான் மற்றும் எகிப்து நாடுகள் கண்டித்துள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் ஆரம்பமாகிய பின்னர், மத்திய கிழக்கில் அமெரிக்க வீரர்கள் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டிருப்பது இது முதல்முறை.
ஜோர்தான் அரசின் செய்தித்தொடர்பாளர் முஹானத் முபைதீன், அமெரிக்காவுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஜோர்தான் படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஜோர்தானின் ஸ்திரத்தன்மை சீர்குலைக்க நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக எகிப்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
எகிப்து ஜோர்தானுக்கு ஆதரவாக இருக்கும். மத்திய கிழக்கு அமைதியாகவும் ஸ்திரத்தன்மையும் நீடித்திருக்க சகல வகையான வன்முறைச் சம்பவங்களையும் எதிர்ப்பதாக எகிப்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரே எதிரியை எதிர்த்து போராடுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்க வீரர்கள் செய்துள்ள தியாகங்கள் எப்போது நினைவில் இருக்கும். காயமடைந்த அமெரிக்க வீரர்கள் சீக்கிரமாக குணமடைய வேண்டிக்கொள்வதாகவும் என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.