முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, அரசியல் அநாதை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, பொதுஜன பெரமுண கட்சியில் இருந்து சுயாதீன மக்கள் சபை (நிதஹஸ் ஜனதா சபாவ)யை உருவாக்கிய போது அதில் டிலான் பெரேரா, ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்டவர்களுடன் சன்ன ஜயசுமணவும் அதில் இணைந்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் நாலக கொடஹேவா தலைமையில் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, வசந்த யாப்பா, கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோருடன் சேர்ந்து சன்ன ஜயசுமணவும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்
எனினும் சன்ன ஜயசுமணவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொண்டால் தாங்கள் அதன் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்று ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியூதீன் ஆகியோர் நேரடியாக சஜித் பிரேமதாசவிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ரிசாத் பதியூதீன் அதனை எழுத்து வடிவிலும் சஜித்திடம் சமர்ப்பித்துள்ளார்.
இதன் காரணமாக தனது கட்சியின் தேர்தல் வெற்றியில் பெரும்பான்மை சதவீதம் கொண்டுள்ள முஸ்லிம் வாக்குகளை இழக்க விரும்பாத சஜித் பிரேமதாச, சன்ன ஜயசுமணவை ஒதுக்கி வைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.
அதனையடுத்து வேறு வழியின்றி ரொஷான் ரணசிங்க தலைமையிலான அரசியல் கூட்டணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் கடந்த நாட்களில் அவர்களின் வைபவங்களில் அழையா விருந்தாளியாக சன்ன ஜயசுமணவும் கலந்து கொண்டுள்ளார்.
எனினும் அங்கும் போதிய ஆதரவுக் கரம் நீட்டப்படாத நிலையில் தற்போது ஆளுங்கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் தரப்பினருடன் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது