முதன்முறையாக இரசாயனம் மூலம் மரண தண்டனை

உலகில் முதன்முறையாக நைட்ரஜன் ஹைபோக்ஸியா மூலம் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த தண்டனை அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வியாழக்கிழமை (25) நிறைவேற்றப்பட உள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத வகையில் நிறைவேற்றப்படவுள்ள இந்த மரண தண்டனையை தவிர்க்க இறுதிவரை முயற்சிகளை மேற்கொண்ட 58 வயதான கென்னத் யூஜின் ஸ்மித் என்பவர் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

மேன்முறையீட்டு மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றமும் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க மறுத்துள்ளளது.

அலபாமா நீதிமன்றங்கள் தீர்ப்பை உறுதி செய்தன. இந்த நூற்றாண்டில் ஒருவர் இவ்வாறு தண்டிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் இதுவே முதல்முறை.

1988 ஆம் ஆண்டு கோல்பர்ட் கவுண்டியில் சார்லஸ் சென்னட் என்ற மதத் தலைவர், தனது மனைவி எலிசபெத் சென்னட்டை கொலை செய்ய பில்லி கிரே வில்லியம்ஸ் என்ற நபருக்கு ஒப்பந்தத்தை வழங்கினார்.

குறித்த மதத் தலைவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்திருந்தமை அவரது மனைவிக்கு தெரிய வந்ததை அடுத்து மனைவியை கொலை செய்து, அவரது பெயரில் உள்ள காப்பீட்டு பணத்தை பெற்றுக்கொள்வதற்காக கென்னத் ஸ்மித் மற்றும் ஜோன் பார்க்கர் என்ற இரண்டு ஒப்பந்தக் கொலையாளிகளுக்கு தலா ஆயிரம் டொலர்களை வழங்கியுள்ளார்.

இரண்டு ஒப்பந்த கொலையாளிகளும், 1988 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி வீட்டில் வைத்து எலிசபெத் சென்னட்டை கொடூரமாக கொலை செய்தனர்.

சார்லஸ் சென்னட் இதனை கொள்ளையர்களின் வேலை என நம்ப முயற்சித்துள்ளார்.

விசாரணையில் உண்மை வெளிவரும் என பயந்து சார்லஸ், சம்பவம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னர் அவர் தனது குடும்பத்தினர் முன்னிலையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் பில்லி கிரே வில்லியம்ஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2020 ஆம் ஆண்டு சிறையில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

ஸ்மித் மற்றும் பார்க்கர் ஆகிய இருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஜூன் 2010 ஆம் ஆண்டு பார்க்கர் மரண ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால், ஸ்மித் வழக்கில் தண்டனை நிறைவேற்றப்படுவது தாமதமாகி வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி ஸ்மித்துக்கு மரண ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற முயற்சித்தனர்.

ஆனால், ஊசி செலுத்துவதற்கான நரம்பு கிடைக்காததால், தண்டனையை அதிகாரிகள் நிறுத்தினர்.

இந்த நிலையில், அலபாமா உச்ச நீதிமன்றம் பிறப்பித்த மரண தண்டனை உத்தரவு காலாவதியானது. அவரது மரணதண்டனையை மறுபரிசீலனை செய்ய அலபாமா ஆளுநர் விசாரணையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இறுதியில் நைட்ரஜன் ஹைபோக்ஸியா முறையில் தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்தபோது. பிரச்சினை ஆரம்பமாகியது.

இவ்வாறு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதல் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, ஸ்மித்தின் சட்டத்தரணிகள், அவரது உடல் மற்றும் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தனர்.

ஸ்மித்தின் குடும்ப உறுப்பினர்களும் இந்த வகையான தண்டனையை நிறைவேற்ற முடியாது.அவர் அனுபவித்த தண்டனைக் காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இவ்வாறான தண்டனை மனிதாபிமானமற்ற செயல் என்று கூறி வருகின்றன. மறுபுறம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த தண்டனையை நிறுத்துமாறு அலபாமா மாநில அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் கொலை செய்யப்பட்ட எலிசபெத்தின் குடும்பத்தினர் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கோரி வருகின்றனர்.

இதனிடையில் ஸ்மித்தின் சட்டத்தரணிகள், அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின்படி (குற்றம் மற்றும் வழக்கத்திற்கு மாறான தண்டனை) தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டை நேற்று விசாரணைக்கு எடுத்ததுடன் அதனை நிராகரித்தது. ஒன்பது நீதியரசர்களில் மூன்று பேர் மட்டுமே ஸ்மித்தின் மேன்முறையீட்டு சார்பாக தீர்ப்பளித்தனர். ​​ஏனைய நீதியரசர்கள் மனுவை நிராகரித்தனர்.

55

நைட்ரஜன் ஹைபோக்ஸியா என்றால் என்ன?

நைட்ரஜன் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் குழாய் குற்றவாளியின் மூக்கில் மாஸ்க் மூலம் இணைக்கப்படும். வாயு வெளியேறியவுடன்.ஒக்சிஜன் இல்லாமல் நைட்ரஜனின் அதிகரிப்பால் வலிப்பு ஏற்பட்டு அந்த நபர் இறந்துவிடுவார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒக்சிஜன் சிலிண்டர் மூலம் ஒருவர் எப்படி காப்பாற்றப்படுகிறாரோ அதே விதத்தில் சட்ட ரீதியாக நைட்ரஜன் ஹைபோக்ஸியா மூலம் மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை மரணதண்டனை ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் உட பல நாடுகள் தடை செய்து விட்டதால், அந்த ஊசிகளில் பயன்படுத்தப்படும் மருந்து கிடைப்பது அரிதாகி விட்டது. இதனால், மாற்று வழிகளுக்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

அலபாமாவுடன், மிசிசிப்பி மற்றும் ஓக்லஹோமா ஆகிய மாநிலங்களிலும் நைட்ரஜன் வாயுவால் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin