ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை இந்திய தொழிலதிபர் அதானிக்கு வழங்குவதால் தேசிய பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது, ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், உள்ளிட்ட முக்கிய அனைத்து அரச நிறுவனங்களும் டெலிகொம் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை வேறு நாட்டைச் சேர்ந்த தனியாருக்கு வழங்குவது தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்க வேண்டுமானால், உள்ளூர் தொழிலதிபர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரச துறையில் பணிகள் மெதுவாகவே இடம்பெறுகின்றன. ஆனால் தனியார் துறையில் அப்படியில்லை. பொதுவான தனியார் வங்கிக்குச் சென்றால் பணிகள் விரைவாக முடிந்துவிடும். ஆனால் அரச வங்கியில் அப்படியில்லை.
எனவே நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துங்கள். ஆனால் உள்ளூர் தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். நம் நாட்டில் எத்தனை கோடீஸ்வர தொழிலதிபர்கள் உள்ளனர்?
புலம்பெயர் தமிழ் மக்களை முதலீடு செய்ய வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது சிறந்த யோசனை, புலம்பெயர் தமிழ் மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்க முடியும்.
ஏனெனில் இந்த நிறுவனங்கள் தற்போதைய அமைச்சர்களின் ஆட்களை நிரப்பி வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
எனவே, டெலிகாம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கினால், உள்ளூர் தொழிலதிபர்களுக்கு கொடுங்கள் என்று கூறுகிறோம். இல்லாவிட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.