நாட்டுக்கு மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புதிய அரசியல் பயணத்திற்கு தேசிய மக்கள் சக்தியை தலைமைத்துவத்தை வழங்கும் என அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய மாற்றம் பற்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த உணர்வும் இல்லை. மக்களுக்கு சாப்பிட உணவு இல்லை என்றாலும் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக அவரும் அவரது சகாக்களும் கூறுகின்றனர்.
மருந்து இல்லாத, கல்வி பெற முடியாத,மக்களுக்கு பிரதிபலன்கள் கிடைக்காத பொருளாதாத்தினால் என்ன பயன் இருக்கின்றது. அவர்களின் பொருளாதார புள்ளிவிபரங்கள் உள்ளே இருக்கின்றதே தவிர, வாழ்க்கைக்குள் இல்லை.
மனசாட்சி இருக்கும்,நாட்டுக்கு ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் மக்கள் இம்முறை தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த எங்களுடன் இணைந்து வருகின்றனர்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள சகோதர முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதியாக அலி சப்றி ரஹீமை பாராளுமன்றத்திற்கு அனுப்பினர். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வாக்களித்தமை குறித்து நீங்கள் பெருமைப்படுகிறீர்களா?,
முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிய அலி சப்றி ரஹீம், தனது சிறப்புரிமைகளை பயன்படுத்தி தங்கத்தை கடத்தி வந்து சிக்கினார்.
இதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு வந்து சட்டத்தை உருவாக்க கைகளை உயர்த்தினார். சட்டத்தை மீறி விமான நிலையத்தில் சிக்கிய அவர், மறுநாள் பாராளுமன்றத்தில் சட்டத்தை உருவாக்க கைகளை உயர்த்தினார்.
வீழ்ச்சியடைந்திருப்பது, சமூக, பொருளாதாரம் மற்றும் சட்டம் என்பன மாத்திரமல்ல.மக்களின் விருப்பு, வெறுப்பு உட்பட அனைத்து வீழ்ச்சியடைந்துள்ளது.
கொலை வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற பிரேமலால் ஜயசேகர தேர்தலில் இரத்தினபுரிய மாவட்டத்தில் முதல் இடத்திற்கு வருகிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் இப்படியானவர்களே முதலிடத்திற்கு வந்துள்ளனர். தமக்கு பணம் கொடுப்பார் என்றால் திருடனாக இருந்தாலும் பரவாயில்லை என்று மக்கள் எண்ணினர். அப்படி நினைத்து நாடு ஒன்றை உருவாக்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.