ஜே.வி.பி விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்க முற்படுவது ஏன்? அமைச்சர் பிரசன்ன

பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பதவிகளை மாற்றுவதை விட பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்துவதே தற்போதைய தேவை. அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் மேலும் பதிலளிக்கையில்,

கேள்வி – எதிர்காலத்தில் எந்த தேர்தல் முதலில் நடைபெறவுள்ளது?

பதில் – அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும். ஆனால், ஜனாதிபதி பொதுத் தேர்தலையும் நடத்தலாம். தேர்தல்கள் நடைபெற இன்னமும் அதிகளவான காலம் உள்ளது. தற்போது நாங்கள் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தே அதிக கவனத்தை செலுத்தியுள்ளோம்.

கேள்வி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலை எதிர்பார்க்கிறது?

பதில் – பொதுஜன பெரமுன கிராம மட்டத்தில் சிறப்பான கட்டமைப்பை கொண்டுள்ள ஒரு கட்சியாகும். நாங்கள் தேர்தலை நடத்தமாறு போட்டிக்குச் செல்ல போவதில்லை. ஆனால், எந்த தேர்தலுக்கும் தயாராகவே இருக்கிறோம்.

கேள்வி – பொதுஜன பெரமுனவுக்கு ஒரு ஜனாதிபதி வேட்பாளர் இல்லை எனக் கூறப்படுகிறதே?

பதில் – எங்கள் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். அதுதொடர்பில் கலந்துரையாடப்படுகிறது. போரில் வெற்றி பெற்று நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமித்தோம். நல்லாட்சியை ஏற்படுத்தவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நியமித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டார். தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த சவாலை முறியடிக்க தற்போதைய ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டோம். ஆனால் இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் இருக்கிறோம். இந்த நெருக்கடி ஏற்பட்ட போது மற்றவர்கள் அனைவரும் ஓடி ஒளிந்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார். எதிர்காலத்துக்கு தேவையான வேட்பாளர் நிறுத்தப்படுவார்.

கேள்வி – அப்படியென்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்கின்றீர்களா?

பதில் – ஆம்… இப்போது பொருளாதாரத்தை சரிசெய்து நாட்டை ஸ்திரப்படுத்தக்கூடிய தலைவரைக் கொண்டுவர வேண்டும். திருடர்களை பிடிப்பதாக தம்பட்டம் அடிக்கும் தலைவர்களால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது. அறிவார்ந்த மக்கள் இந்நிலையைப் புரிந்து கொண்டுள்ளனர்.

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளாரா?

பதில் – இல்லை… அவர் முன்மொழியப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும். பொதுஜன பெரமுன ஆதரிக்கும் வேட்பாளரே இந்நாட்டின் ஜனாதிபதியாக இருப்பார்.

கேள்வி – தற்போது தேசிய மக்கள் சக்தி வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிகிறது. அது அச்சுறுத்தல் இல்லையா?

பதில் – இவர்கள் முகநூலில்தான் ஜனாதிபதியாக இருக்கின்றனர்.கிராம அளவில் இவர்களுக்கு கிளை அமைப்புகள் இல்லை. திட்டங்கள் இல்லை. மூன்று சதவீத வாக்கை 1500 சதவீதமாக அதிகரிப்பது எப்படி?. அரசியலை புரிந்துகொள்ளும் மக்கள் இதனை உணர்ந்துக்கொள்வார்கள்.

கேள்வி – கம்பஹாவில் இருந்து பிரதமராக ஒருவர் வர உள்ளதாக கூறப்படுகிறதே?

பதில் – தினேஷ் குணவர்தன பிரதமராக சிறப்பாக பணியாற்றுகிறார். எனவே, அந்த பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. நாம் இப்போது பொருளாதாரத்தை வலுப்படுத்தவே பார்க்கிறோம். இது ஒரு தேசிய பிரச்சினை. அதனால், தேவையில்லாத பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டியதில்லை.

கேள்வி – பிரதமர் பதவி வேண்டாம் என்று ஏன் கூறுகிறீர்கள்?

பதில் – விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும். நான் பதவி கேட்பவன் அல்ல.

கேள்வி – ஜே.வி.பியின் அரசாங்கத்தின் கீழ் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளாரே?

பதில் – அவர்கள் அப்படித்தான் சொல்ல வேண்டும். காலி முகத்திடல் போராட்டத்தில் விபச்சாரிகள் அதிகமாக இருந்தனர். ஆனால் இவ்வாறு கூறுவது விபச்சாரிகளுக்கு அவமானமாகும்.

Recommended For You

About the Author: admin