மேற்குக்கரை காசா மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உகண்டாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் 19ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தீர்மானங்கள் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (NAM) பிரகடனத்துடன் இஸ்ரேல் இணங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
காசாவின் இன அமைப்பில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. ஐந்து ஆண்டுகளுக்குள் பாலஸ்தீன அரசு நிறுவப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 24,620 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 61,830 பேர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.