நாட்டு மக்கள் வாழ வழியின்றி மோசமான நிலையில் இருக்கும் இத்தருணத்தில் செங்கடலை பாதுகாக்க கப்பலை அனுப்பும் செயல்பாடு இத்தருணத்தில் அவசியமா? என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஆராதனைக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு கூறியுள்ளார்.
”செங்கடலின் பாதுகாப்புக்கு கப்பலை அனுப்பும் செயல்பாடு இத்தருணத்தில் அவசியமற்ற ஒன்றாகும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு வழியில்லாதுள்ளனர்.
அதன் காரணமாக இத்தருணத்தில் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பவே நாம் செயலாற்ற வேண்டும். மக்களுக்கான கடமைகளையும் பொறுப்புக்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளது.” என்றும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கப்பல் நிறுவனங்கள் மாற்று கடல்மார்கங்களை பயன்படுத்தும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளோம் என அறிவித்துள்ளன.
ஐரோப்பா மற்றும் வட, தென் அமெரிக்காவுக்கான கப்பல் போக்குவரத்தில் இந்த தாக்குதல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இலங்கை பொருளாதாரத்திலும் இந்த விடயம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசாங்கம் கூறுகிறது.
இதனால் செங்கடலின் பாதுகாப்புக்கு இலங்கை கடற்படையின் கப்பலை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் பின்புலத்திலேயே பேராயரின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.