கனடாவில் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்

கனடாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள குடியிருப்பு நெருக்கடியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் கட்டுமான பணிகளை பாதித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்களின் வருகை வீட்டுத் தேவையினை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் சர்வதேச மாணவர்களுக்கான வரம்பை தாராளவாத அரசாங்கம் பரிசீலித்து வருவதாக குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டிய அமைச்சர், “இந்த எண்ணிக்கை அதிருப்தியளிப்பதாகவும், இது கட்டுப்பாட்டை மீறிய எண்ணிக்கை” எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை எந்தளவு குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை.

இதேவேளை, உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கனடாவில் 2022ஆம் ஆண்டு 800,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் செயலில் உள்ள விசாக்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை அனுமதி பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது என்பதால், கனடா சர்வதேச மாணவர்களுக்கான பிரபலமான இடமாக மாறியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான கனடா அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச மாணவர் விசாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் யோசனையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மாணவர்கள் பலரும் கனடாவில் உயர் கல்வியை தொடர்ந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கத்தின் இந்தக் கட்டுப்பாடு எதிர்காலத்தில் கனடா செல்ல திட்டமிட்டுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin