புருணை நாட்டின் இளவரசர் அப்துல் மட்டீனின் திருமணத்தை முன்னிட்டு அந்நாட்டில் கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆசிய, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றுட் அரசக் குடும்பத்தினர், அரச திருமணச் நிகழ்வில் இன்று கலந்துகொண்டுள்ளனர்.
32 வயதான இளவரசர் மட்டீன், சடங்குபூர்வ சீருடையை அணிந்திருந்ததுடன், 29 வயதான மணப்பெண் யாங் முலியா அனிஷா ரோஸ்னா நீள, வெண்ணிற ஆடையை அணிந்து சடங்கில் கலந்துக்கொண்டார்.
இந்த திருமண சடங்கை முன்னிட்டு புருணை தலைநகரமான பண்டார் ஸ்ரீ பகவான் கோலாகலமாக காணப்பட்டதுடன் திருமண தம்பதியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் கூடியிருந்தனர்.
அரச திருமணச் சடங்கில் ஜோர்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், பஹ்ரேன், பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசக் குடும்பத்தினர் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துக்கொண்டனர்.
இதனை தவிர மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தோனீசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி பேர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகிய உலகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.