ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் பின்னணி என்ன?

ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

வடக்கில் உள்ள தொழில் முனைவோர், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், பல்கலைக்கழக சமூகம் ,வடக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியே சென்று சாதனை புரிந்தவர்கள்… போன்ற பலரையும் அவர் சந்தித்துப் பாராட்டிப் படமெடுத்துக் கொண்டார். நல்லூரில் அமைந்திருக்கும் ரியோ க்ரீம் ஹவுஸ்சில் ஐஸ்கிரீம் அருந்தினார். அப்பொழுது வடக்கின் சாதனையாளர்கள் பலரை அழைத்துப் பாராட்டிப் படம் எடுத்துக் கொண்டார்.

அவர் அழைத்த எல்லாத் தரப்புக்களும் அவரை சந்தித்தன.அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளாத ஒரே ஒரு தரப்பு நல்லை ஆதீனம்தான். வழமையாக அரசியல் தலைவர்களும் ராஜதந்திரிகளும் நல்லை ஆதீனத்தை அவருடைய இடத்துக்குச் சென்று சந்திப்பார்கள். அப்படித்தான் யாழ் மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரையும் தேடிச் சென்று சந்திப்பார்கள்.

ஆனால் இம்முறை நல்லை ஆதீனத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஆதீனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே ரணில் வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றும் ஆதீனம் குற்றம் சாட்டியது. அதனால் சந்திப்பில் ஆதீனம் கலந்து கொள்ளவில்லை. மட்டுமல்ல, ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டது. ஒரு இந்து ஆதீனம் ஜனாதிபதியை சந்திக்க மறுத்திருக்கிறது.

அதேசமயம் கச்சேரியில் ஜனாதிபதிக்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பில் ஒரு இந்துச் சாமியார் காவி உடையோடு காணப்படுகிறார். அவரோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் காணப்பட்டது.யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் காணவில்லை.அது ஒரு சிறிய எதிர்ப்பு என்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் அவருக்கு காட்டப்பட்ட ஒரே எதிர்ப்பு அதுதான்.

ஜனாதிபதி யூஎஸ் ஹோட்டலில் புத்திஜீவிகள் மற்றும் குடிமக்கள் சமூகம் என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதியினரைச் சந்தித்தார்.அதில் அதிகளவு அரசு அதிகாரிகளும் காணப்பட்டார்கள். சந்திப்பின் போது அவர் 13ஆவது திருத்தத்தை வலியுறுத்திப் பேசினார். மேல் மாகாணத்தில் இருப்பது போல பிராந்திய பொருளாதார வலையங்களை வடக்கிலும் கட்டி எழுப்பலாம் என்று ஆலோசனை கூறினார் .

13ஆவது திருத்தத்துக்குள் எல்லாமே இருக்கிறது, நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், நாங்கள் அதற்கு வேண்டியதைச் செய்வோம் என்றும் உறுதியளித்தார். தென்கொரியா,யப்பான்,பிரித்தானியா போன்ற நாடுகளை உதாரணமாகக் காட்டி, அங்கெல்லாம் கூட்டாட்சி கிடையாது, ஆனாலும் அபிவிருத்தி உண்டு, பொருளாதார வளர்ச்சி உண்டு என்று பேசினார். 13ஆவது திருத்தத்திற்குள் போதிய அதிகாரங்கள் உண்டு அதைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார் .

பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியில் உரையாற்றும்போது, புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து உதவிகளைப் பெறலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல கேள்விகளோடு அங்கு சென்றிருக்கிறார்கள். ஆனால் மருத்துவ பீடத் தலைவர் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் கூறிய ஜனாதிபதி அப்பேராசிரியர் மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டபோது, நான் முதலில் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அதன்பின் எனைய பேராசிரியர்கள் அந்த இடத்தில் கேள்வி கேட்பதற்கு விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.

அவருடைய பயண ஏற்பாடுகளையும் சந்திப்பு ஏற்பாடுகளையும் வடக்கில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி செய்ததாகத் தகவல்.அதனால் வடக்கில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மத்தியில் ஒருவித போட்டி உணர்வு ஏற்பட்டிருக்கிறது.அவர்கள் தங்களுடைய வல்லமையைக் காட்டுவதற்காக யாழ். கிரீன் கிராஸ் ஹோட்டலில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சுமார் 800க்கும் குறையாத ஆதரவாளர்கள் அந்தச் சந்திப்பில் பங்கு பற்றியதாக ஒரு தகவல். அதில் பங்குபற்றிய எல்லாருமே கட்சிக்காரர்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து ரணில் வியந்ததாகவும் ஒரு தகவல்.

வவுனியாவில் அவர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் சந்தித்திருக்கிறார்.வன்னியில் உள்ள தொழில் முனைவோர்களைக் கண்டு கதைத்து, ஊக்கப்படுத்தி அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார்.

அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு வந்து இவ்வளவு நாட்கள் தங்கியிருந்தமை என்பது இதுதான் முதல் தடவை. இவ்வளவு தொகையான தரப்புகளைச் சந்தித்தமையும் இதுதான் முதல் தடவை.

இது ஒரு தேர்தல் ஆண்டு. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு உண்டு. அப்படி என்றால் அவர் தமிழ் மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா?

தமிழ் அரசியலில் பொதுவாக தமிழரசுக் கட்சியானது ஐக்கிய தேசியக் கட்சியோடுதான் இணக்கத்துக்கு வரும். இதற்கு முந்தைய ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் அப்படித்தான் நடந்திருக்கின்றது. ஆனால் இந்தத் தடவை யு. என். பி இரண்டாக உடைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதி தாமரை மொட்டுக்கட்சி அதாவது ராஜபக்சகளின் கட்சியின் தயவில் தங்கியிருக்கின்றது. மற்றொரு பகுதி சஜித் பிரேமதாசவால் தலைமை தாங்கப்படுகின்றது.இதில் சஜித் பிரேமதாசாவைத்தான் தமிழரசுக் கட்சி ஆதரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனென்றால்,ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் பதில் ஆளாகத் தேர்தலில் முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இப்பொழுது ராஜபக்சக்கள் தம்மிக்க பெரேராவைக் களமிறக்கப் போவதாகக் கூறிவருகிறார்கள். ஆனால் அது ரணிலோடான தங்களுடைய பேரத்தை அதிகப்படுத்தும் நோக்கிலான ஒரு உத்தி என்று சந்தேகிக்கப்படுகின்றது. கடைசிக்கட்டத்தில் அவர்கள் ரணிலைத் தமது பொது வேட்பாளராக நிறுத்தம் கூடும் என்ற ஊகங்கள் அதிகம் உண்டு.

அவ்வாறு ராஜபக்சங்களில் தங்கியிருக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கடந்த 15 ஆண்டுகளாக நடந்த எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்ற இடம் அதுதான். ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களிப்பது. இந்த முறையும் அதே வாக்களிப்பு நடைமுறை தொடருமாக இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சகளின் ஆளாகக் களமிறங்குவாராக இருந்தால்,அவருக்குத் தமிழ் வாக்குகள் கிடைப்பது சவால்களுக்கு உள்ளாகும்.அது அவருக்கும் தெரியும்.தெரிந்துகொண்டுதான் அவர் நிலப்பறிப்பையும் சிங்கள பௌத்த மயமாக்கலையும் முடுக்கி விட்டுள்ளார்.

மேலும் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கும் முடிவை வெளிப்படையாகத் தெரிவித்தால்,அங்கேயும் தமிழ் வாக்குகள் ரணிலுக்குக் கிடைப்பது சவால்களுக்கு உள்ளாகும்.

தமிழரசுக் கட்சி தனது தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தலில் மூழ்கியிருக்கின்றது.சுமந்திரன் அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால்,பெரும்பாலும் சஜித்தை ஆதரிக்கும் முடிவு மேலும் உறுதிப்படுத்தப்படும்.ஏனென்றால் சுமந்திரன் நெருங்கிய சகாவாகிய சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகத் தெரிவித்து வரும் கருத்துக்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ் பொது வேட்பாளர் எனப்படும் தெரிவு ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கமுடையது என்று சாணக்கியன் கூறுகின்றார்.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால், அதற்காகக் கட்சிகள் கூட்டாக உழைத்தால், அது சஜித்துக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளை அப்பொது வேட்பாளரை நோக்கி மடை மாற்றி விடும்.அதைத் தமிழரசு கட்சிக்குள் சுமந்திரன் அணி விரும்பவில்லை என்று தெரிகிறது. அதைத்தான் சாணக்கியனின் கூற்று வெளிப்படுத்துகின்றது.

ஆனால் அக்கட்சி தனது தலைவர் யார் என்பதை தெரிந்து எடுத்த பின்னர்தான் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை மதிப்பிடலாம். சில வாரங்களுக்கு முன்புவரை சுமந்திரனே கட்சியின் தலைவராக வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. அதற்கு வேண்டிய வேலைகளை அவர் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். அதை நோக்கி ஒரு பலமான வலைப் பின்னலையும் அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.ஒரு தேர்தலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலிமையாக வைத்ததும்,அதை நோக்கிக் காய்களை நகர்த்தியதும் அவர்தான்.

ஆனால் அண்மை வாரங்களாக நடக்கும் உட்கட்சித் தேர்தல் பிரச்சாரங்களை வைத்து பார்த்தால், சிறிதரன் சுமந்திரனுக்குக் கடுமையான போட்டியைக் கொடுப்பது தெரிகின்றது.கடைசி நேரத்தில் சிறீதரனின் பிரச்சாரம் சுமந்திரனுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கலாம். அப்பொழுது வெல்பவரின் பக்கம் சாய்வதற்காகக் காத்திருக்கும் தரப்புக்கள், தளம்பக்கூடிய தரப்புகள், சிறிதரனை ஆதரிக்கலாம். அதனால் சிறீதரனுக்கு வெற்றி வாய்ப்புகள் இப்போதிருப்பதைவிட மேலும் அதிகரிக்கலாம். எனவே தமிழரசுக் கட்சிக்குள் யார் தலைவராகத் தெரிவு செய்யப்படுவார் என்பதிலும் அதன் அடுத்த கட்ட முடிவு தங்கியிருக்கின்றது.

சிறீதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறும் தரப்புகள் அவர் மீது செல்வாக்கு செலுத்துவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

இப்படிப்பட்டதோர் தமிழ் அரசியல் சூழலில், தமிழ் வாக்குகளைக் கவர்வது தான் ஜனாதிபதியின் நோக்கம் என்று எடுத்துக் கொண்டால் அவருடைய வடக்கு விஜயம் அந்த விடயத்தில் அவருக்கு உதவி புரிந்திருக்குமா?

அல்லது ஐ.நாவுக்கு அவர் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளின் பிரகாரம் நல்லிணக்க நாடகத்தை அரங்கேற்ற அது அவருக்கு உதவுமா?

அல்லது பதிமூன்றாவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம் அவர் இந்தியாவை நெருங்கிச் செல்ல அது உதவுமா?

Recommended For You

About the Author: admin