19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை அணியில் தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் ஜனவரி 19 முதல் பெப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவின் ஐந்து மைதானங்களில் நடைபெறவுள்ளது.
16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்த அணியினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நேற்று அறிவித்தது.
அணியின் தலைவராக சினேத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக வீரர்களாக இருவரும் பெயரிடப்பட்டதுடன், குறித்த தொடருக்கான இலங்கை அணி தென்னாப்பிரிக்கா நோக்கி புறப்பட்டும் உள்ளது.
இந்த அணியில் கொழும்பு – கொட்டாஞ்சேனை , புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் மாணவனாவான் சாருஜன் சண்முகநாதனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
சாருஜன் சண்முகநாதன் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் முதல் தடவையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
பின்னர், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச உலகக் கிண்ண போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த படியாக விளையாடவுள்ள தமிழ் வீரர் என்ற பெருமையினையும் இவர் பெற்றுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை முன்னுதாரணமாக கொண்டுள்ள சாருஜன், அவரைப் போலவே விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் திறம்பட செய்து 2022 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த விக்கெட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டு கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் டொனி கிரேவினால் ”லிட்டில் சங்கா” என சாருஜன் சண்முகநாதன் அழைக்கப்படிருந்தார்.