ஜனவரி மாத இறுதிக்குள் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்காவிடின் கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்தார்.
சமகால பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி பேசுகிறோம். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெறும் 1000 ரூபா சம்பளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிறுத்த முற்பட்டனர்.
பெருந்தோட்ட அமைச்சு தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பது நகரத்துக்கு மாத்திரமல்ல. தோட்டப்புற மக்ளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் விற்பக்கப்படும் பொருட்கள் தோட்டப்புறங்களுக்குச் செல்லும் போது விலைகள் மும்மடங்காக உயர்கின்றன. அதனால் ஜனாதிபதி பெருந்தோட்ட கம்பனிகளை அழைத்து 1700 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த தொகை போதாது. ஆனால், தற்போது வழங்கப்படும் 1000 ரூபாவுடன் ஒப்பிடும் போது ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடிய தொகையாகும்.
ஜனவரி மாதம் இறுதிவரை கம்பனிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நலன்புரித் திட்டங்களுடன் இந்த சம்பள உயர்வு இடம்பெற வேண்டும். இல்லாவிட்டால் கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து உரிய முறையில் நிர்வாகத்தை நடத்தும் கம்பனிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
மலையக மக்களை துன்புறுத்த வேண்டாம். அவர்கள் உழைத்து வாழும் மக்களாகும். அவர்களது சாபம் நிச்சியமாக உரியவர்களை தண்டிக்கும்.” என்றார்.