நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலும் சாதியப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்கின்றன. அதற்கு உரிய தீர்வுகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஊடாக கிடைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம் மற்றும் தேசிய நீரியல் சட்டமூலம் மீது இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
”இன, மதப் பிரச்சினைகளுக்கு அப்பால் சாதிய ரீதியாக மக்கள் பாரிய ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியர்கள் எனக் கூறப்படுபவர்களை இன்றும் கிராமங்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
நாம் இனவாதம் மற்றும் மதவாதம் பற்றியே பேசுகிறோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரச்சினையாக இது உள்ளது. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகப் பகுதிகள் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்க்கின்றன.
அரசியலிலும் இந்தப் பிரச்சினை காணப்பட்டது. சம்பிரதாயப்பூர்வமான இந்த சாதிய முறையை உடைத்தெறிந்து அதனை சவாலுக்கு உட்படுத்திய ஒரே தலைவர் ரணசிங்க பிரேமதாசதான்.
வேறு எந்தவொரு தலைவராலும் இதனை செய்ய முடியாது போனது. ஆகவே, நல்லிணக்க அலுவலகத்தின் ஊடாக காலாதி காலமாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுவொன்றை பெற்றுக்கொடுப்பதும் அவசியமாகும்.” என்றார்.