மௌனம் காக்க இலங்கை அரசாங்கம் முடிவு?

இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மௌனம் காக்குமாறும் தேவையற்ற கருத்துகளை வெளியிட கூடாதென்றும் இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக அறிய முடிகிறது.

இலங்கையின் அரசியலில் மாலைத்தீவு விவகாரம் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்த கூடும் என்பதால் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஆனால், இதுதொடர்பில் அரசாங்கம் எவ்வித உத்தியோகப்பூர்வ முடிவுகளையும் அறிவிக்கவில்லை. இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அறிய முடிகிறது.

லட்சத்தீவுகளில் பிரதமர் மோடி சுற்றுலா ஊக்குவிப்பை செய்யும் நோக்கில் வெளியிட்ட சில காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பில் மாலைத்தீவின் அமைச்சர்களும் அரச உயர்மட்டத்தினரும் வெளியிட்ட சில கருத்துகளால் இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் பாரிய முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளில் பாரிய சிக்கல்கள் எதிர்காலத்தில் உருவாகும் நிலை தோன்றியுள்ளது. மாலைத்தீவை போன்றே இலங்கையிலும், இந்தியா மற்றும் சீனாவின் ஆதிக்கம் நிலவுகிறது.

என்றாலும், இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை இலங்கை தொடர்ந்து அளிப்பதால் இலங்கை மீது இந்திய அக்கறையுடன் செயல்கிறது. ஆனால், மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி நேரடியாக சீனா சார்ப்பு கொள்கையை பின்பற்றுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு ஏற்றாற் போல் அவரது நகர்வுகளும் உள்ளன.

இதனால், இந்த விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க அரசாங்கம் முடிவுசெய்தள்ளதாகவும் அறிய முடிகிறது.

Recommended For You

About the Author: admin