இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் இழிவான கருத்துகளை மாலைத்தீவின் சில அமைச்சர்கள் பதிவுசெய்ததால் இருநாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்துள்ளதன் எதிரொலியாக EaseMyTrip இணையத்தளம் மாலைத்தீவுக்கான சுற்றுலா முன்பதிவுகளை இடைநிறுத்தியுள்ளது.
EaseMyTrip இணையத்தளம் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா முன்பதிகளை மேற்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய இணையத்தளமாகும். இந்தியாவின் சுற்றுலாச் சந்தையில் 22 சதவீத பங்கையும் இந்த இணையத்தளம் கொண்டுள்ளது.
மாலைத்தீவுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பு நாடுகளாக இந்தியாவும் ரஷ்யாவும் உள்ளன. மிகவும் அழகிய கடற்கரைகளையும் தீவுக் கூட்டங்களையும் கொண்ட நாடாக மாலைத்தீவு உள்ளது. பல ஆடம்பரமான சுற்றுலா விடுதிகளும் இங்கு உள்ளன. இதனால் இந்த இருநாடுகளில் இருந்தும் மாலைத்தீவுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
EaseMyTrip இணை நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான பிரசாந்த் பிட்டி, மாலைத்தீவுக்கான முன்பதிவு “காலவரையின்றி” இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
“எந்தவொரு சுயமரியாதை தேசமும் இதைச் செய்ய வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தோம். மாலைத்தீவு அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடமிருந்து வெளியான கருத்துகள் எமது நாட்டிற்கு மிகவும் இழிவானவை.”என்றும் பிட்டி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியும் மாலைத்தீவும் பாரம்பரியமாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தாலும், ‘இந்தியா அவுட்’ பிரச்சாரத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற தற்போதைய ஜனாதிபதி மொஹமட் முய்ஸு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இருநாட்டு உறவுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
பெய்ஜிங்கும் புதுடெல்லியும் இந்தியப் பெருங்கடலில் செல்வாக்கு செலுத்தப் போட்டியிடுகின்றன. இந்தியப் பெருங்கடலில் மாலைத்தீவின் அமைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதாலேயே இருநாடுகளும் செல்வாக்கு செலுத்த முற்படுகின்றன. இங்கு சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.
லட்சத்தீவில் இருந்து பிரதமர் மோடி வௌியிட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை கடுமையாக மாலைத்தீவின் சில அமைச்சர்கள் விமர்சித்தமையை அடுத்தே முறுகல்கள் முற்றியுள்ளன. இதனால் மாலைத்தீவில் இருந்த இந்திய தூதுவர் இப்ராஹிம் ஷாஹீப்பை புதுடெல்லி நேற்று மீள அழைத்திருந்தது.
‘‘EaseMyTrip மாலைத்தீவுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளதன் மூலம் சர்வதேச சுற்றுலாவில் தற்காலிக சரிவை காணக்கூடும் என்றாலும், வெளிநாடுகளில் தனது நிறுவனம் லட்சத்தீவுகளை மேம்படுத்தும்‘‘ என பிட்டி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலைத்தீவின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதி சுற்றுலாத்துறை மூலமே கிடைக்கிறது. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து கடந்த ஆண்டு தலா 209,000 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.