ஜனவரி மாதத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினால் வழங்கப்படும் பருவச் சீட்டுகளை இரத்துச் செய்யுமாறு அதன் பொது முகாமையாளர் டிப்போ முகாமையாளர்களுக்கு ஜனவரி 3 ஆம் திகதி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக பாடசாலை பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் நாகஸ்தன்னே அருண தேரர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பெரும் சிரமம்
இலங்கைப் போக்குவரத்துச் சபை தனது 66ஆவது ஆண்டு நிறைவை நேற்று (7) கொண்டாடும் நிலையில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்த முடியாமல் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அதோடு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் ஏறிய பாடசாலை மாணவர்கள் ஜனவரி மாத்துக்கான பயணச்சீட்டை நடத்துனரிடம் காண்பிக்கும் போது இதை இரத்து செய்யுங்கள், பணத்தை எடுங்கள் என்று கூறுவதாகவும் அருண தேரர் கூறியுள்ளார்.