ஜப்பான் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் உள்ள நிதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது.
எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதி அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ரொட்னி எம் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”நான் ஜப்பான் நிதியமைச்சரை சந்தித்தேன். இன்னும் ஒரு வாரத்தில் ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வார். 10 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் வரும் அவர் 2 நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார்.
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஜப்பானின் உதவி எந்தவிதத்தில் தேவைப்படுகிறது, கடன் மறுசீரமைப்பில் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் அதற்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவி வழங்கும் என்றும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமான அடிப்படை வசதி அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜப்பான் முதலீட்டாளர்களை எவ்வாறு நாட்டுக்கு அழைப்பது பற்றிய கலந்துரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான தனியார் துறையினரை தொடர்புபடுத்துவதற்கான விடயங்கள் குறித்தும் இலங்கை விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.” என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் டோக்கியோவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி ஜூலை 2023 இல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
அதனையடுத்து தற்போது ஜப்பான் நிதி அமைச்சரின் வருகை இலங்கைக்கு பல பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் என அரசாங்கம் கூறுகிறது.
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜப்பானின் நிதி ஒதுக்கீட்டில் மாலபே முதல் கோட்டை வரையிலான இலகு ரயில் திட்டம் முன்னெடுக்கப்படவிருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போதைய ரணில் விக்ரமசிக் தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்தது. ஜப்பான் நிதி அமைச்சரின் இந்த விஜயத்தில் இதுகுறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அரசதரப்பு செய்திகள் மூலம் அறிய முடிகிறது.