இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணிகளை அமைக்கும் செயல்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தலைமையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய கூட்டணியில் பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் இணைத்துக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
லன்சாவின் புதிய கூட்டணியில் அகில இலங்கை பொது விவசாயிகள் முன்னணி இணைந்துள்ளது. புதிய கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்ஷன யாப்பாவுடன் விவசாயிகள் முன்னணியின் பிரதிநிதிகள் நேற்றுக் காலை இராஜகிரியவில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள அனுர பிரியதர்ஷன யாப்பா,
“தற்போது நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பேசுவதும் விமர்சிப்பதையுமே செய்கின்றன. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லை.
பொதுஜன பெரமுன செய்த தவறுகள் காரணமாகவே நாம் அதில் இருந்து வெளியேறினோம். நாட்டு மக்களுக்கு புதிய அரசியல் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் மக்களுக்கு பொய் சொல்கின்றன. அதனால் நாங்கள் அவர்களது கூட்டணியில் இணைய தயாரில்லை.” என பதில் அளித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.