பங்களாதேஷில் வன்முறை அச்சம்: நாடு முழுவதும் படையினர் குவிப்பு

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக நாடு முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட தலைநகர் டாக்காவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு இராணுவ வீரர்கள் கவச வாகனங்களில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் மற்றும் தேர்தலை நடத்த நடுநிலை அதிகாரியிடம் அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்க மறுத்ததை அடுத்து எதிர்க்கட்சி இந்த முடிவை எடுத்தது.

வாக்களிப்பு நிலைய அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே படையினர் செயற்படுவார்கள் என இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கரையோர மாவட்டங்களில் கடற்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மலையகப் பகுதிகளில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் ஆதரவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக பங்களாதேஷ் முழுவதும் பரவி வரும் வன்முறை, தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வரலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடுமையான ஆட்சியை கடைப்பிடித்து வரும் ஹசீனா, எதேச்சதிகாரம், மனித உரிமை மீறல்கள், பேச்சுரிமையை நசுக்கினார், கருத்து வேறுபாடுகளை அடக்கி, விமர்சிப்பவர்களை சிறையில் அடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவரது முக்கிய போட்டியாளரும், இரண்டு முறை பிரதமருமான கலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் பல குற்றச்சாட்டுகளின் பேரில் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த ஹசீனாவின் அரசாங்கம் மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin