குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் மக்கள்

பிள்ளைகளுக்கு சரியாக உணவுகளை வழங்கவும்,வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவலத்தை மேலும் ஊக்குவிக்கும் ஒரு ஆட்சியே தற்போது உருவாகியுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் இந்நிலை மேலும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வற் வரி அதிகரிக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க ஒரே வழி வற் வரியை அதிகரிப்பது அல்ல, மாறாக நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை நாட்டிற்கு திரும்பப் பெறுவதற்கான கட்டமைப்பை ஸ்தாபிப்பதே பொறுத்தமான வழி.

திருடர்களை நம்பி ஜனாதிபதி,பிரதமர் போன்ற பதவிகளைப் பெற்றதாலேயே தற்போதைய அரசாங்கத்தால் அதனை மேற்கொள்ள முடியாதுள்ளது. எனவே, திருடர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக திருடர்களைப் பாதுகாத்து வரும் வேளையையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் உள்ளிட்ட மருந்துத் துறையில் சமீபத்தில் நடந்த திருட்டு ,ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது, அதனை தோற்கடிக்க 113 உறுப்பினர்கள் கை தூக்கினர்.

அவர்கள் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற திருடர்கள் கூட்டமே. அவர்கள் திருடிய வளங்களை மீண்டும் எமது நாட்டிற்கு கொண்டு வர முடியுமாக இருந்தால், இவ்வாறு வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 59 அரச பாடசாலைகளுக்கு 562 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: admin