ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நோக்கத்துடன் காய் நகர்த்தும் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா சிறுபான்மை கட்சிகளுடன் அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இரண்டு தமிழ் கட்சிகள் மற்றும் ஒரு முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை தற்போது தெரிவிக்க முடியாது” எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கும் நோக்கில் வர்த்தகர் தம்மிக்க பேரேரா அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.
ஆனால், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லையென அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்புலத்திலேயே சிறுபான்மை கட்சிகளுடன் தம்மிக்க பெரேரா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.