ஸெலன்ஸ்கியின் போர் முழக்கம்: புடின் கூறியதென்ன?

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தமது புத்தாண்டு உரையில் போரில் உக்ரேனியர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை பற்றி நீண்ட நேரம் பேசினார்.

மறுபுறம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அது குறித்த தமது சுருக்கமான உரையில் போர் பற்றி மேலோட்டமாக, ஆனால் ரஷ்ய நாட்டுக்கு அது வாழ்வா, சாவா போராட்டம் என்று வர்ணித்துள்ளார்.

ரஷ்யா, உக்ரேன் இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் மீது ஆண்டிறுதியில் தாக்குதல்களை அதிகரித்துள்ள வேளையில் இந்த ஆண்டிறுதி உரையை இரு நாட்டுத் தலைவர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

எனினும், இவ்வாண்டில் இரு நாடுகளுமே போர் முனையில் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் கோடிட்டுக் காட்ட முடியாத நிலையில் உள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

“இவ்வாண்டின் முக்கிய விளைவாக உக்ரேன் வலுவடைந்துள்ளது,” என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி தமது உரையில் குறிப்பிட்டார். அவருடைய உரை, இடை இடையே உக்ரேனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களையும் உலகத் தலைவர்களுடனான சந்திப்புகளையும் தாங்கி வந்தது.

போர் என்ற வார்த்தையைத் தமது உரையில் 14 தடவை உச்சரித்த திரு ஸெலன்ஸ்கி, ஓராண்டுக்கு முன் சொன்னதைப் போல் இவ்வாண்டும் உக்ரேன் சுதந்திர நாடாக இறுதி வெற்றி காணும் என்று கூறினார்.

“உக்ரேனியர்களை அச்சுறுத்த, அவர்களைப் பணியவைக்க, பூமிக்குக் கீழே பதுங்க வைக்கும் முயற்சியில், எதிரி நாடு எத்தனை ஏவுகணைகளைப் பாய்ச்சினாலும், தாக்குதல்கள் எவ்வளவு கொடூரமாக, இரக்கமற்றதாக, இடைவிடாததாக இருந்தாலும், நாம் மீண்டெழுவோம் என்றும் ஸெலென்ஸ்கி முழங்கினார்.

இதற்கு நேர்மாறாக ரஷ்ய ஜனாதிபதி புடின், தமது படை வீரர்களை வெற்றியாளர்கள் என வர்ணித்தார். உக்ரேன் நாட்டைப் பெயர் குறிப்பிடாமல் பேசினார். அத்துடன், சென்ற ஆண்டு இந்தப் போரை சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று வருணித்த திரு புட்டின், இவ்வாண்டு அதுபோல் எதுவும் கூறவில்லை.

இவ்வாண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் போட்டியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin