கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியரான குறித்த நபர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்க கடத்தல்
176 மில்லியன் ரூபா பெறுமதியான 66 தங்க பிஸ்கட்டுகளை உள்ளாடையில் மறைத்து வைத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே சுங்க அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க பிஸ்கட்டுகளை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்ததுடன், சந்தேகத்திற்கிடமான கேட்டரிங் நிறுவன ஊழியருக்கு 176 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்த தவறியதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.