தோல்விகளை உள்ளடக்கிய வருடம் முடிவுக்கு வருகிறது

வெற்றிகளை விட எண்ணற்ற தோல்விகளை உள்ளடக்கிய ஒரு வருடம் முடிந்து புதிய வருடம் உதயமாகிறது. 2023 ஆம் ஆண்டு நம் மனதில் மகிழ்ச்சியைக் கொண்டுவரக் கூடியவாறு எதுவும் கிடைக்காத ஆண்டு. இந்த ஆண்டில் மக்கள் வெற்றியின் சாயல் கூட காணவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முறையாக மக்கள் ஆணையைப் பெற்ற அரசாங்கத்தை உருவாக்கினால் அன்றி தற்போதைய குழப்பமான மற்றும் நம்பிக்கையற்ற இருள் சூழ்ந்த காலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. எனவே, அடுத்த ஆண்டு புதிய தேர்தலுக்கு வழி வகுப்பதே முதன்மையான போராட்டமாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால், 2024 ஆம் ஆண்டும் ராஜபக்ஷக்களை முன்னரையும் விட பாதுகாப்பாக ஆட்சியாளர் தொங்கு பாலத்தின் ஊடாக கரை சேர்த்த ஆண்டாக அமையலாம்.

நாடு பல பாரிய பொருளாதார மற்றும் அரசியல் இடர்களை எதிர்நோக்கி வரும் இத்தருணத்தில், நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கை நிலைமைகளில் கூட பல அசாதாரண சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளன.

விவசாயம் மற்றும் தொழில்முயற்சியாளர் சார்ந்த தன்னிறைவு பொருளாதார முறை தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கு அற்ற நடவடிக்கைகளால் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.

இந்நிலை மாற வேண்டுமானால் ஆட்சியாளர்களின் நன்மைகளைப் பற்றி சிந்திக்காமல் மக்களைப் பற்றி சிந்திக்கும் ஆட்சி முறையே நாட்டுக்கு தேவை.

75 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் எந்த எதிர்க்கட்சியும் செய்யாத பொதுச் சேவையை நாட்டின் ஜனரஞ்சக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 3 ஆண்டுகளில் செய்துள்ளது.

இந்த சேவையை 2024 ஆம் ஆண்டிலும் தொடர்வதே எங்கள் நோக்கம். மேலும், மக்களை ஒடுக்கி, வரிக்கு வரி விதித்து, மக்களின் வாழ்வை அழிக்கும் வகையில் அரசு செயல்பட்டுள்ள இந்த தருணத்தில், நாம் மீண்டும் ஒரு நாடாக ஒன்றிணைய வேண்டும்.

எதிர்வரும் புத்தாண்டு இலங்கையர்களான எமக்கு முக்கியமான ஆண்டாகும். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பல தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆண்டாகும்.

எனவே, இதுவரையில் நாம் பெற்ற வெற்றிகளின் பலனை அமைதியான முறையில் அனுபவித்து ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொண்டு எமது தேசிய அபிலாஷைகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தப் புத்தாண்டிலாவது மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin