நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் மூடிமறைக்கப்பட்ட வழக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.
“நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது பல வழக்குகள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் எமது ஆட்சிக் காலத்தில் அந்த வழக்குகள் அனைத்தும் மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அதற்காக நீதித்துறைக்கு தேவையான வளங்கள் வழங்கப்படும். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எமது ஆட்சியின்போது தப்பவே முடியாது.
நாம் ‘பைல்களை’ காட்டிக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். நல்லாட்சி காலத்தில் ‘டீல்’ காரணமாக மறைக்கப்பட்ட பல வழக்குகள் உள்ளன.
இது குறித்து ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்சக்களுக்கிடையில் உடன்படிக்கையும் உள்ளது.
இவ்வாறு மறைக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் மீள விசாரணைக்கு சட்டத்தின் முன் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள், கொள்ளை அடிக்கப்பட்ட பணமும் மீளப்பெறப்படும்” என தெரிவித்தார்.