இந்திய உயர்ஸ்தானிகர் – பிரமதர் சந்திப்பு

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் விரிவான விவாதத்தை நடத்தியதுடன், முன்மொழியப்பட்ட கூட்டு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தாங்கிகள், துறைமுகங்கள், புகையிரதங்கள் மற்றும் ஏனைய துறைகளில் கூட்டுத் திட்டங்கள் உட்பட எரிசக்தித் துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குதல் மற்றும் பணப்புழக்க பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட ஆதரவுக்காக இந்தியாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

புதிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 2007 முதல் 2010 வரை இலங்கையில் சேவை புரிந்த தனது பதவிக் காலத்தை நினைவு கூர்ந்தார்.

இருதரப்பு நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்காக மீண்டும் ஒருமுறை கொழும்பில் பணியாற்றுவது பெரும் பாக்கியமாக கருதுவதாகக் கூறினார்.

இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டாண்மை தொலைநோக்குப் பார்வை மற்றும் இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்ட 14 அம்ச வேலைத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

“இலங்கைத் தலைமையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையின் நலனுக்காக, இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றுவதே எனது நோக்கம்” என்று அவர் அறிவித்தார்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் ஐடிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வியின் மேம்பாடு உள்ளிட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அதன் திட்டங்களுக்கு இந்திய நிபுணத்துவம் இலங்கைக்கு விரிவுபடுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்

Recommended For You

About the Author: admin