கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக வந்த நோயாளர் ஒருவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதன்படி, அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளரிடம் இதுதொடர்பில் வினவிய போது, இந்த சம்பவம் உண்மைதான் என்றார். இதன் விளைவாக குறித்த நோயாளி உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 6A இல் அனுமதிக்கப்பட்டு மார்பக தொடர்பான சத்திரசிகிச்சைக்காக B சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஒக்ஸிஜனுக்கு பதிலாக கார்பனீராக்சைடு கொடுக்கப்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்ட படுக்கையிலேயே தமது கடைசி மூச்சை விட்டதாகவும் வைத்தியசாலையின் குறித்த அதிகாரி தெரிவித்தார்.
மூச்சுத்திணறலே மரணத்துக்கான காரணம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராத அல்லது அசாதாரணமான நிகழ்வு எதுவும் மரணத்திற்கான காரணமாகப் பதிவு செய்யப்படவில்லை.
அவரது சடலம் தற்போது தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படாவிட்டால், இதனை சாதாரண மரணம் என பதிவுசெய்யும் முயற்சி வெற்றியளிக்கும் என அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.