தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் கட்சிகள்

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கூட்டங்களை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் அக்கட்சி செய்துள்ளது.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

என்றாலும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் 19ஆம் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளது. அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரமாண்ட கூட்டமொன்று கொழும்பில் இடம்பெற உள்ளது.

குறித்த கூட்டத்தில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அறிவிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது. ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சில மாறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால் போட்டியில் ஐ.தே.க முந்திக்கொள்ளும் நோக்கில் வேட்பாளர் அறிவிப்பை செய்ய உள்ளது.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவில் 4 பேரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளருக்காக முன்மொழியப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. என்றாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு குறைவாகவே உள்ளது.

வர்த்தகர் தம்மிக்க பெரேராவுக்கும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்குமான நட்பு மிகவும் நெருக்கமானதாக உள்ளது. அதனால் தம்மிக்க பெரேராவின் பெயரை பசிலுக்கு ஆதரவானவர்கள் முன்மொழிந்து வருகின்றனர்.

என்றாலும், ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என இன்னமும் இறுதிப்படுத்தவில்லை. அதனால் களத்தில் முந்திக்கொள்ளும் முனைப்பில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாளை சனிக்கிழமை மாத்தறையில் பிரமாண்ட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பிரசாரமாக இது இருக்கும் என அக்கட்சி வெளியிட்டுள்ள விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான போட்டியால் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Recommended For You

About the Author: admin