இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 வீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் குறைவடைந்துள்ளதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இலங்கையில் நூற்றுக்கு 60.5 வீதமான குடும்பங்களின் மாத வருமானம் குறைவடைந்துள்ளதுடன், மாதாந்த செலவு 91 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டில் 3.4 வீதமான குடும்பங்களின் வருமானம் மாத்திரம் அதிகரித்துள்ள நிலையில், 36.6 வீதமான குடும்பங்களின் வருமானத்தில் மாற்றம் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது
வருமானம் குறைந்துள்ள குடும்பங்களில் 73.6 வீதமானவர்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 6 வீதமானவர்கள் மேலதிக வருமானம் அல்லது கூடுதல் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்த்துள்ளது.
வருமானம் குறைந்த குடும்பங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் கடன் பெறுதல், பொருட்களை அடமானம் வைத்தல், பிறரிடம் உணவு மற்றும் பணம் பெறுதல் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமான குடும்பங்கள் கடனினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் சுமார் 50 வீதமானோர் தொழில் ரீத்தியான மாற்றங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொருளாதார நெருக்கடியால் 14.2 வீதமானோர் தொழிலை இழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் கல்வி நடவடிக்கைகள் தடைபட்டுள்ள நிலையில், 3 முதல் 21 வயதுக்குட்பட்ட 54.9 வீதமானோரின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் 29 வீதமானவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில், அவர்களில் 7 வீதமானவர்கள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிகிச்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, சிகிச்சை முறைகளை மாற்றிய நோயாளிகளில் 35.1 வீதமானோர் சிகிச்சை அளிக்கும் இடங்களை மாற்றியுள்ளதுடன், 33.9 வீதமானோர் நோய் தீவிரமடையும் நிலையில் மாத்திரம் மருந்துகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்தது.
தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்குப் பின்னர் நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் கடுமையானது.
இதன் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.