ரஷ்யாவில் இருந்து செயல்முறை பயிற்சிக்காக பாணந்துறை கேத்துமதி பெண்கள் வைத்தியசாலைக்கு வந்த இலங்கை மருத்துவர் ஒருவரின் பயண பொதியில் இருந்து நவீன ஐ.பேட்,பவர் பேங்,ஏ.டி.எம். அட்டையை கொள்ளையிட்டு பணத்தை பெற்றுக்கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான பெண்ணே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவில் மருத்துவப் பட்டப்படிப்பை படித்து வரும் மருத்துவர் செயல்முறை பயிற்சிக்காக கேத்துமதி பெண்கள் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
தனது பயணப் பொதியில் இருந்த ஐ.பேட், பவர் பேங் மற்றும் ஏ.டி.எம் அட்டை என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்தே பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி பண்டாரகம பிரதேசத்தில் உள்ள வங்கியில் பணத்தை எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வங்கியில் உள்ள பாதுகாப்பு கெமராவில் பதிவாகிய காட்சிகளுக்கு அமைய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொள்ளை சம்பவம் நடந்த தினத்தில் சந்தேக நபரான பெண் கேத்துமதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்து சென்றதை உறுதிப்படுத்திய பின்னர் அந்த பெண்ணை கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.