அடுத்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை தவிர எதிர்க்கட்சி செல்லவோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவோ எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கிரிந்திவெலயில் நடைபெறும் கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துக்கொண்ட மகிந்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட மாட்டது. அவர்களில் எந்த தவறும் இல்லை. அடுத்த ஆண்டு தேர்தலும் நடைபெறவுள்ளது.
கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். ஏற்கனவே அதனை செய்துள்ளதாக நினைக்கின்றேன்.
அதேவேளை போதைப் பொருள் விற்பனையாளர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை சிறந்தது. போதைப் பொருள் காரணமாக நாடு அழிந்து வருகிறது.
வரி அறவீடுகளை இரத்துச் செய்ய முடியாது. வரி அறவீடுகள் இருக்கும். மக்களுக்கு நியாயமான வரி அறவீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கின்றேன் என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.