குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போஷாக்கான உணவாக உட்கொள்ளும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை(அஃப்லாடெக்சிக்சின்) இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின், பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
ஒருவன் செய்திப்பிரிவுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
“திரிபோஷா உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மக்காச்சோளத்தில் இருக்கக்கூடிய ‘அஃப்லாடெக்சின்’ அளவை இரட்டிப்பாக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
இது ஒரு மோசமான நிலைப்பாடாகும். குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிருக்கு இதனால் ஆபத்து ஏற்படும்.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, திரிபோஷாவில் உள்ள ‘அஃப்லாடெக்சின்’ அளவு, ஒரு பில்லியன் சோளப் பகுதிக்கு 5 முதல் 10 விகிதம் வரை அதிகரிக்கப்படும்.
நூற்றுக்கு 5 வீதத்திற்கு குறைவாக இருக்கம் பட்சத்தில் அதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் 5ற்கும் அதிகமாகும் பட்சத்தில் இதனால் உடலுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும்.
‘அஃப்லாடெக்சின்’ என்ற வேதிப்பொருளை உட்கொள்வதால் கல்லீரல் சேதப்படுத்தும் என்பதால், அந்த இரசாயனம் புற்றுநோயாக மாறும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்துவதால் இந்த நிலைமை ஏற்படுகிறது.
ஏற்கனவே தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பாலில் ‘அஃப்லாடெக்சின்’ கலந்திருப்பது குறித்து நாட்டில் பெரும் சர்ச்சை நிலவியது.
இவ்வாறு செல்லும் பட்சத்தில் திரிபோஷா உற்பத்தியை இலங்கையில் இடைநிறுத்திவிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.” என அவர் சுட்டிக்காட்டினார்.