அவுஸ்திரேலியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நேற்று (25) இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலும் கோல்ட் கோஸ்ட் பிராந்தியத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில எரிசக்தி நிறுவனமான எனர்ஜெக்ஸ் தெரிவித்துள்ளளது. இதன் காரணமாக 110,000 வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சேத விபரங்களை ஆராய்ந்து வருவதாகவும் சேதம் குறித்த தகவல்கள் தொடர்ந்தும் கிடைத்து வருவதாகவும். சில வீடுகளுக்கு மேலும் நாட்கள் மின் தடைப்படும் எனவும் எனர்ஜெக்ஸ் கூறியுள்ளது.
அதேவேளை கோல்ட் கோஸ்ட் பிரதேசத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் 59 வயதான பெண் உயிரிழந்துள்ளார். தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
பலத்த காற்று வீசியதால் வீதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளதுடன் வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், இன்று (26) இடியுடன்கூடிய மழை,பலத்த காற்று,ஆலங்கட்டி மழை போன்றவை ஏற்படலாம் என அவுஸ்திரேலிய தேசிய வானிலை முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
கோல்ட் கோஸ்ட் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் உள்ள ஆற்றில் பாரிய வெள்ளம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அவுஸ்திரேலியாவின் மேற்கு பிராந்தியத்தில் கடும் வெப்ப அலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.